ஜும்ஆவுக்கு பதில் ளுஹர் தொழலாம்; முகம் மூடி தடையாக இருக்க வேண்டாம் | தினகரன்

ஜும்ஆவுக்கு பதில் ளுஹர் தொழலாம்; முகம் மூடி தடையாக இருக்க வேண்டாம்

வைப்பக படம்: முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் அச்சம் கொள்வோர் வீட்டில் தொழவும் - அ.இ.ஜ.உ.

அச்சம் நிலவும் பகுதிகளில் நாளை (26) பள்ளிவாசல்களில் ஜும்ஆ பிரசங்கம் மற்றும் தொழுகை நடத்தாது, ளுஹர் தொழுகையை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை முஸ்லிம்களின் விசேட தினமான வெள்ளிக்கிழமை என்பதால் அன்றைய தினம், நண்பகலில் இடம்பெறும் ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக, அச்சம் நிலவும் பகுதிகளில்ல பள்ளிவாசல்களில் ஜுமுஆவை நடாத்தாமல் ளுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், தனது வீட்டிலுள்ள குழந்தைகள் பெண்கள் மற்றும் தமது உடமைகளுக்கு ஆபத்து வரலாம் எனும் அச்சமுள்ளவர்கள் தத்தமது வீடுகளில் ளுஹ்ரைத் தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடியான நிலைமையை கவனத்திற்கொண்டு நடந்துகொள்ளுமாறும், பாதுகாப்புப் படையினர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரும் நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைய, முஸ்லிம் பெண்கள் தற்பொழுதுள்ள நிலமையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறியுள்ளதோடு, தேவைப்படும் போது அனைவரும் தங்களை அடையாளப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை தன்னுடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம்கள் என்ற வகையில் பொறுப்புவாய்ந்த இலங்கைப் பிரஜைகளாகவும் தமது தாய் நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் கடமைப்பட்டுள்ளதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினருக்கும், சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கும் ஒத்தாசையாக இருக்கும்படி அனைவரிடமும் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

அது மாத்திரமன்றி ஜும்ஆ தொழுகை தொடர்பில் பின்வரும் விடயங்களை பேணுமாறு உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • ஜுமுஆப் பேருரையை  “உயிர்களை மதிக்கும் இஸ்லாம்” எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளல்.
  • ஊடரங்குச் சட்டம், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மதித்து நடத்தல் வேண்டும்.
  • மஸ்ஜித்களில் குறிப்பாக ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித்களில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை முன்னரே பரிசோதித்துக் கொள்ளல் வேண்டும்.
  • ஜுமுஆவுக்கு வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.
  • வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது வாகdச் சொந்தக்காரர்கள் தத்தமது தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் எழுதி வைத்தல் வேண்டும்.
  • மஸ்ஜிதுக்கு வருகை தருபவர்கள் விடயத்தில் அவதானமாக நடந்துகொள்வதோடு எவ்வித பொதிகளையும் மஸ்ஜித் வளாகத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதித்தல் கூடாது.
  • குத்பாவையும் தொழுகையையும் 30 நிமிடத்துக்கு மேற்படாமல் சுருக்கிக் கொள்ளல்.
  • குத்பா மற்றும் தொழுகை நடைபெறும்போது மஸ்ஜித் நிர்வாகம் பொருத்தமாகக் கருதுகின்றவர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஜும்ஆ முடிந்த பிறகு ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளல் வேண்டும்.
  • ஜுமுஆ நடாத்த முடியாதளவு அச்சம் நிலவுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நம்பிக்கையான சிலரை நியமித்தல் வேண்டும். அவர்கள் ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுதுகொள்வார்கள்.
  • 13 வயதுக்குட்பட்டவர்களை மஸ்ஜிதுக்கு அழைத்து வருவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

Add new comment

Or log in with...