கிராமிய உள்ளூர் சேவையை ஊக்குவிக்க உலக வங்கி கடனுதவி | தினகரன்

கிராமிய உள்ளூர் சேவையை ஊக்குவிக்க உலக வங்கி கடனுதவி

வடக்கு, வடமத்தி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.  

வீதி, சுகாதாரக் கட்டமைப்பு போன்ற மக்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் விடயங்களில் புதிய அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாக உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

வீதிகள், வடிகான்கள், நீர் விநியோகம், சிறிய நீர்ப்பாசனம், தகவல் தொழில்நுட்ப இணைப்புக்கள், கிரமாத்துக்கான மின்சார இணைப்புக்கள் போன்ற அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் வாழ்வாதாரம் என்ன இத்திட்டத்தினால் முன்னேற்றப்படவுள்ளன. 

2016ஆம் ஆண்டு 4.1 வீதமாகக் காணப்பட்ட தேசிய வறுமை கடந்த வருடத்தில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இருந்தபோதும் பிராந்திய மட்டத்தில் வறுமை நிலைமைகள் வேறுபடுவதாக அமைகின்றன. உலக வங்கியினால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார நிலைமைகள் குறித்த ஆய்வுக்கமைய, பலவீனமான சமூக நிறுவனங்கள், பாலினரீதியான பலவீனங்கள் குறிப்பாக பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட வீடுகள், இளைஞர்களின் நடைமுறை போன்ற விடயங்கள் வறுமையில் தாக்கம் செலுத்துவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.   'பொறுப்புவாய்ந்த முறைமையொன்றை உருவாக்குது மற்றும் மக்களுக்கான இடத்தை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கியமான குறிக்கோளாகும். உள்ளூர் விநியோக தீர்வு சேவையின் ஊடாக தேவையுடைய மக்களை இணைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்' என இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் இதா.இஸட் பிஸாராயி-ரிதிஹோவ் தெரிவித்தார். 

தேவையுடைய உள்ளூர் சனத்தொகைக்கும், பலவீனமான சமூகக் குழுவுக்கும் உதவும் வகையில் பொறுப்புவாய்ந்த முறைமையொன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தப் புதிய உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டமானது உள்விவகார மற்றும் மாகாணசபைகள் அமைச்சு, மாகாணசபைகள் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.

நூறு மில்லியன் அமெரிக்க டொலரைக் கொண்ட இத்திட்டத்தில் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி கடனாக வழங்கும். 23.65 மில்லியன் டொலர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நன்கொடையாகவும், 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாகவும் வழங்கப்படும்.   


Add new comment

Or log in with...