'கையேந்தி நிற்பதைவிட சுயதொழில் ஈடுபடுவது கௌரவமாகும்' | தினகரன்

'கையேந்தி நிற்பதைவிட சுயதொழில் ஈடுபடுவது கௌரவமாகும்'

சுயதொழில் முயற்சியாளர் ஆரன் ஏ.ஆர்.எஸ் பஷன்ஸ் வேர்ல்ட்

வடமாகாணம் யுத்த சூழலிலிருந்து மீண்டும் ஒரு தசாப்தத்தை எட்டுகிறது. அபிவிருத்திப் பணிகள் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் இளைஞர் யுவதிகள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகள் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க மறுபக்கத்தில் சுயதொழில் முயற்சிகள் மூலம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.  

குடும்ப சூழலால் கல்வியை இடைநடுவில் கைவிட்ட பருத்தித்துறை திக்கம் பகுதியைச் சேர்ந்த ஆரன் என்ற இளைஞனை இதற்கான முன்னுதாரணமாகக் கூறமுடியும். இருபத்தி ஒரு வயது மாத்திரமே நிரம்பிய அந்த வாலிபன் தனது சொந்த முயற்சியால் பெண்களுக்கான கைப்பைகள் மற்றும் ‘பேர்ஸ்’ உற்பத்தி செய்து வெற்றிகரமாக தொழிலில் வளர்ச்சிகண்டு வருகிறார். தன்னைப் போன்று ஏனைய இளைஞர்களும் சுயதொழில்முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதே ‘ஏ.ஆர்.எஸ் பஷன்ஸ் வேர்ல்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆரனின் எதிர்பார்ப்பாகவுள்ளது.  

“வருடமொன்றுக்கு 3இலட்சம் முதல் 4இலட்சம் வரையிலான பெண்களுக்கான கைப்பைகள் மற்றும் பேர்ஸ்களை உற்பத்தி செய்கின்றோம். எனது சொந்தப் பணத்தில் வாங்கிய தையல் இயந்திரமொன்றே உள்ளது. மேலும் தையல் இயந்திரங்களைக் கொள்வனவு செய்து உற்பத்தியை அதிகரிப்பதாயின் சுமார் 35இலட்சத்துக்கும் அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. முதலீட்டாளர்கள் யாராவது முன்வந்தால் எனது உற்பத்தியை அதிகரிக்க முடியும்” என்கிறார் ஆரன்.  

கடந்த 5வருடத்துக்கு முன்னர் நல்லூர் திருவிழாவுக்குச் செல்லும்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான துணி பேர்ஸ்களைப் பார்த்து இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. வீடு திரும்பியவுடனேயே 250ரூபா முதலீட்டில் துணியை வாங்கி 5கைப்பைகளை உருவாக்கியுள்ளார். அவற்றை பருத்தித்துறையில் உள்ள ராணி அழகுசாதனப் பொருட்கள் விற்பனைக் கடையில் வழங்கி விற்பனையும் செய்துள்ளார். முதலாவது உற்பத்திக்குக் கிடைத்த வரவேற்பு மேலும் மேலும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தூண்டியாக அமைந்துள்ளது.  

“முதலில் தயாரிக்கப்பட்ட ஒரு பேர்ஸை 100ரூபாய் வீதம் விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த பணத்தை அடுத்த தொகுதிக்கான மூலதனமாக்கினேன். பகலில் மேசன் வேலை செய்வது இரவில் பேர்ஸ் மற்றும் கைப்பைகள் உற்பத்தி செய்வதே எனது நாளாந்த பணியாகும்” என விளக்கினார். 

ஆடைகள் தைக்கும் இயந்திரத்தில் நாமே தேடித் தேடி புதிய வடிவமைப்புக்களை உற்பத்தி செய்தோம். ஒவ்வொரு மாத முதலீட்டிலும் வரும் இலாபத்தைக் கொண்டு அடுத்த தொகுதிக்கான மூலப்பொருட்கள் மற்றும் எமக்குத் தேவையான இயந்திரங்களைப் படிப்படியாகக் கொள்வனவு செய்கின்றோம்.  

கைப்பையொன்றை தைத்துக் கொண்டு என்னுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்த ஆரன், “4இலட்சம் ரூபா முதலீடு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு உற்பத்திகளைச் செய்கின்றோம். தற்போழுது 12வடிவங்களை உடைய பேர்ஸ்களை வடிவமைக்கின்றோம். சீசனுக்கு ஏற்ற வகையில் கைப்பைகளை உற்பத்தி செய்கிறோம்” என்றார். 

நாம் தயாரிக்கும் கைப்பைகள் மற்றும் பேர்ஸ்களுக்கான ஓடர்களை யாழ் நகரிலுள்ள முகவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். சுமார் ஒரு இலட்சம் ரூபா முதலீடு செய்தால் 15ஆயிரம் ரூபாவை இலாபமாகப் பெறமுடியும். எமது சொந்த உழைப்புக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளாது இலாபத்தின் மூலம் எமது நிறுவுனத்தை நடத்திவருகின்றோம். 

நாளொன்றுக்கு 25பாக்ஸ் உற்பத்தி செய்து, கிழமையில் நான்கு நாட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வடமாகாணம் மாத்திரமன்றி திருகோணமலையும் ஆரனின் உற்பத்திகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.  

“ஏ.ஆர்.எஸ். பஷன் வேர்ல்ட் எமது சொந்த உழைப்பு என்ற கர்வம் இருக்கு. எங்கட கையால முதலீடு செய்தால், எனது முதலீட்டைப் பெற வேண்டுமென்பதுடன் இலாபம் பெறவேண்டும் என்பதே நோக்கம்” என்கிறார் அவர். 

தற்பொழுது நாம் பயன்படுத்தும் நான்கு தையல் மெஷின்களும் யூ.என்.டி.பி நிறுவனத்தினால் வழங்கப்பட்டவை. மாதாந்தம் 500பாக்ஸ் உற்பத்தி செய்து விற்கின்றோம்.

எதிர்காலத்தில் வேலைக்கு ஆட்களை அமர்த்தி எங்கட உழைப்பில் நாங்கள் சம்பளம் கொடுக்க வேண்டும். அதுவே அடுத்த கட்ட நகர்வு என தனது எதிர்காலத் திட்டத்தை விபரித்தார் ஆரன்.  தனது மகளும் மருமகனும் இணைந்து உற்பத்திகளை செய்ய, மாமியார் சென்று விற்பனை செய்கின்றார்கள். விற்பனை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் கடை உரிமையாளருடன், நிலமைகளை எடுத்துக்கூறினால், ஒரு பாக் வாங்கும் கடைக்காரர் இரண்டு பாக்களை வாங்கும் நிலமை காணப்படுகின்றதாம். 

“கை ஏந்திப் பிழைப்பதை விட சுயதொழில் முயற்சி மேலானது. கை ஏந்திறவர்களை திரும்பிப் பார்க்க மார்ட்டார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மதிப்பு அதிகமாக உள்ளது” என்கிறார் ஆரன் பெருமையுடன். 

ஆரன் போன்று வடக்கில் பல்வேறு இளைஞர் யுவதிகள் திறமைகளுடன் உரிய முதலீடுகள் மற்றும் வழிகாட்டல்கள் இன்றி வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஆரன் போன்ற தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான நிதித் தேவையை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். மிகவும் குறைந்த வட்டிவீதத்தில் அரசாங்கம் கடன்களை வழங்கி வருகிறது. ஆரன் போன்ற தொழில்முயற்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தினால் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.  

சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...