யுத்தம் விதைத்துச் சென்ற கண்ணிவெடி: 2020இல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை? | தினகரன்

யுத்தம் விதைத்துச் சென்ற கண்ணிவெடி: 2020இல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை?

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் பல வடுக்களை விதைத்துச் சென்றிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கண்ணிவெடி. இதனால் சிலருடைய உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கிறது. பலரின் வாழ்க்கைசூன்யமாக்கப்பட்டிருக்கிறது.

யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் ஆகின்றது. ஆனால் இன்னும் கண்ணிவெடி அச்சுறுத்தல் நீங்கியபாடில்லை. இலங்கையில் கண்ணிவெடியால் பாதிப்புற்ற வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களும் பொலநறுவை மாவட்டமும்உள்ளடங்குகின்றன.இவற்றில் மட்டக்களப்பு மாவட்டம் 2017 ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் எட்டு மாவட்டங்கள் கண்ணிவெடி அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாக இருந்து கொண்டிருக்கின்றன.

“யுத்தம் காரணமாக 2002இல் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு முகாமில் அகதிகளாக வசித்து வந்தோம்.பின்னர் 2007 முகமாலை சொந்த இடத்தில் குடியேறினோம்.எங்களுடைய காணியில்குழி ஒன்றைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது அதனுள் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தபோது எனது கால் மற்றும் கையொன்று துண்டாகிவிட்டது. வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளித்தார்கள். செயற்கைக் கால் பொறுத்தியுள்ளேன். என்ன இருந்தாலும் உண்மையான கால், கை மாதிரி இயங்காதுதானே. அதிகமாக நாற்சக்கர வண்டியில்தான் எனது காலம் கழிகின்றது. என்று கூறினார் முகமாலையைச் சேர்ந்த புண்ணியமலர்.

இவர் போன்று ஆயிரக்கணக்கானோர் இன்று தமது அவயங்களை இழந்து இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த அபார இழப்புக்களும் இன்னல்களும் அனைத்து இனங்களிடத்திலும் காணப்படுகின்றன. கொடூர யுத்தத்தில் பல இராணுவ வீர்ர்களும் தமது அவயங்களை இழந்து கஷ்டங்களுடன் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் இன்னுமின்னும் மனிதர்களை அங்கவீனமாக்கும் இவ்வாறான கொடூர கண்ணிவெடி போன்ற யுத்ததளபாடங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவிவருகின்றன.

அண்மையில் இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதை பார்வையிடுவதைப் பிரதானமாக் கொண்டு இலங்கைக்கு விஜயம்செய்த நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மரியன் ஹேகன், இலங்கையின் கண்ணிவெடிகள் அகழ்வினை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அரசாங்கத்துக்கு 60 மில்லியன் நோர்வேஜிய குரோன் (சுமார் 1200 மில்லியன் ரூபா) வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நோர்வேயின் பங்களிப்பின் மூலம் கண்ணிவெடிகள் அகழ்வு வேலைகள் குறித்த காலத்தில் நிறைவுபெறும் என்று நம்பலாம் என நோர்வே இராஜாங்க செயலாளர் மரியன் ஹேகன் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவிவழங்கும் ஒரு நாடாக நோர்வே இருந்துவருகிறது. அத்தோடு கண்ணிவெடி தடை மாநாட்டின் தலைமைத்துவம் இவ்வருடம் நோர்வேயிடம் உள்ளதுடன் நோர்வே இந்த ஆண்டை கண்ணிவெடி தடுப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மீண்டும் உதவி வழங்கி உள்ளது. இதற்கென ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (124 மில்லியன் ரூபா) ஒதுக்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2009ஆம் ஆண்டு முதல் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (ரூபா 2 பில்லியன்) இதுவரை உதவியாக இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி ஆபத்தை நீக்குவதற்கு அமெரிக்கா 2002 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 9. 5 பில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்களை வழங்கியுள்ளது.

அமெரிக்க நிதி உதவியின் பயனாக இலங்கை இராணுவத்தினருக்கு கண்ணிவெடி அகற்றுவதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைப்பதுடன் கண்ணிவெடி அகற்றுவதற்கு விசேடமாக பயிற்றப்பட்ட நாய்களையும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

அமெரிக்க நிதி உதவியின் பயனாக இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017 ஆம் ஆண்டு கண்ணிவெடி இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கண்ணிவெடியகற்றும் மிகவும் ஆபத்தான இந்தப் பணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் இராணுவத்தின் கண்ணிவெடிகயற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

“எனது கணவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்று நடக்கமுடியாமல் வீட்டில் இருக்கிறார். நான்எனது 3 பிள்ளைகள் மற்றும் கணவரைப் பாரப்பதற்காக கஷ்டத்துக்கு மத்தியில் Halo Trust நிறுவனத்தில் நான்கு வருடங்களாக பணியாற்றி வருகின்றேன். எனக்கு ஆரம்பத்தில் இந்த வேலையில் இணைந்து பணியாற்றும் போது திருப்தியில்லாத நிலைமைதான் இருந்தது. ஆனால் இப்போது மனதுக்கு திருப்தியாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றது. ஏனென்றால் நாங்களும் அகதிகளாக அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த கஷ்டம் எனக்கு நன்கு தெரியும். அதேபோன்று சொந்த இடத்தில் மீள்குடியேறாமல் அகதிகளாக இருக்கின்ற மக்கள் அவர்கள் மீண்டும் மீளக் குடியேறுவதற்கு அவர்களுடைய நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றி துப்புரவுசெய்து கொடுக்கவேண்டும். அதற்கு எம்மாலான முழுமுயற்சிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம்.” என்று தெரவித்தார் கிளிநொச்சி ஊற்றுப்பள்ளத்தைச் சேர்ந்த உள்ளுர் கண்ணிவெடியகற்றும் பெண் பணியாளரான மு. கமலாதேவி (39).

இவர் போன்று பல உள்ளூர் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மு.கமலாதேவி போன்று பல பெண்கள் மக்களை மீள்குடியேற்றும் பொருட்டு ஆர்வத்துடன் பணியாற்றுவது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது பணியாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அண்மையில் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது காயங்களுக்குள்ளாகினர்.  கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற ஒரு பணிதான் இது.

“இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் 2002ல் இருந்து பணியாற்றுகிறது. இலங்கை 2020 இல் கண்ணியெடியற்ற நாடாக மாற்றுவதற்கு சிறப்பாக பணியாற்றி வருகிறது. 800 ஊழியர்களைக் கொண்டு இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை எமது நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. நிதியளிப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் அவர்களது தொடர்ந்தேர்ச்சையான நிதிப்பங்களிப்பு ஒத்துழைப்புடன் 2020ஆம் ஆண்டு அந்த இலக்கை அடைய முயற்சித்து வருகிறது.”  என்று தெரிவித்தார் அடம் எனும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன சர்வதேச பணியாளர்.

இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட், மெக் என்பன சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெக் நிறுவனம் 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பணியாற்றுகிறது. யுத்தம் முடிவுற்று 2009-ல் இருந்து 35 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன் 42 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும் 14,800 வெடிக்காத குண்டுகளை மெக் நிறுவனம் இதுவரை அகற்றி இருக்கிறது.

நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் செயல்முறை சர்வதேச தரத்துக்கு அமைய இடம் பெற வேண்டியுள்ள காரணத்தினால் சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கண்ணிவெடியகற்றல் தொடர்பாக மீதமுள்ள வேலையை முடிப்பதற்கு இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றில் கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் இலங்கையின் நிதி மற்றும் பௌதீக பங்களிப்பும் அவசியமாகின்றது.

“நாங்கள் இடம் பெயர்ந்து பன்னிரண்டு வருட காலமாக யாழ்ப்பாணப் பகுதியில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். இந்த இடம் செல்லால் பாதிக்கப்பட்ட காணி ஆகும். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுடைய இடம் கண்ணிவெடி அகற்றப்பட்டு துப்புரவு செய்யப்பட்டு குடியமர்த்தினர் இப்போது காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றோம்.”என்று கூறினார் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கே கண்ணகி.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் அகதிகளாக்கப்பட்டு கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை காத்திருந்து மீளக் குடியமர்ந்த மக்கள் புதிய கனவுகளுடன் தமது வாழ்க்கையை துவக்க ஆரம்பித்துள்ளனர்.  இவர்கள் போன்று யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட மக்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் திரும்பக்கூடிய, பாதுகாப்பாக வாழக்கூடியதற்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டியுள்ளது.

“இலங்கையில் மூன்று வகையான கண்ணிவெடித் தளங்கள் உள்ளன. அது தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இந்திய அமைதி காக்கும் படையினராலும்,  இலங்கை ஆயுதப் படையினராலும் புதைக்கப்பட்டவையாகும். ஆயுதப்படையினரால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தொடர்பான தரவுகள் தெளிவாக இருந்தமையால் அவை முற்றாக அகற்றப்பட்டு விட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் மற்றும் இந்தியப் படைகள் விட்டுச் சென்ற கண்ணிவெடிகள் தொடர்பான தரவுகள் இன்மையால் அவற்றை மிகவும் அவதானத்துடன் ஆராய்ந்து அகற்ற வேண்டி உள்ளது. எமது நாடு 2020இல் கண்ணி  வெடியற்ற நாடாக மிளிர்வதற்கு ஆபத்துமிக்க இந்தப்பணியை இராணுவம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றது.” என்று  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

98 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் வெற்றி அடைந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் வியன்னாவில் 2017 டிசம்பரில்நடைபெற்ற ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கை மாறல் மீதான தடை, அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனத்தின் அரசுகள் தரப்பின்16 ஆவது கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையைபிரகடனப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு கண்ணிவெடி தடைசெய்யும் பிரகடனம் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டது.  கண்ணிவெடிகளற்ற உலகை கட்டியெழுப்புவதற்கான ஒட்டாவோபிரகடனத்தில் 163 வது நாடாக 2017 இல் இலங்கை இணைந்துள்ளது.

இந்த கண்ணிவெடியகற்றும் சமவாயத்தில் இணைந்ததை அடுத்து நமது நாட்டுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. கண்ணிவெடி தடை மாநாட்டின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.

இலங்கையில் முழுமையாக கண்ணிவெடி அகற்றப்படாததன் காரணமாக 300 குடும்பம் அளவில் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசன்கேணி, வேம்படுகேணி, கிளாலி, முகமாலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ள பிரதேசங்களாக உள்ளன. இப்பிரிவுகளில் கண்ணிவெடி அபாயம் காரணமாக மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ளனர். அவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும், தற்காலிக வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் தம்மைக் குடியேற்றுவதற்கு கண்ணிவெடி அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மீள்குடியேற்றம் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு கண்ணிவெடி அகற்றப்படுவது முக்கியமானதாகும். 2020 க்கு முன்னர் அங்குள்ள காணிகளிலிருந்து கண்ணிவெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்குள்ள பாதுகாப்பான சூழலில் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க அரசாங்கம் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது

ஒவ்வொரு ஏப்ரல் 4ம் உலக கண்ணிவெடி விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.உலகில் 164 நாடுகள் கண்ணிவெடிகள் அற்ற உலகை கட்டியெழுப்புவதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கை நாடும் கண்ணிவெடிகள் அற்றதோர் பூமியை இலங்கை பிரஜைகளுக்கும், இவ் உலகிற்கும் வழங்க வேண்டும்.

ஏ.மொஹமட் பாயிஸ்


Add new comment

Or log in with...