Thursday, March 28, 2024
Home » இலங்கை டெஸ்ட் அணித் தலைவரானார் தனஞ்சய: ஒருநாள் குழாமும் அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் அணித் தலைவரானார் தனஞ்சய: ஒருநாள் குழாமும் அறிவிப்பு

by gayan
January 4, 2024 6:00 am 0 comment

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தேர்வுக் குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்களான தில்ருவன் பெரேரா, இந்திக டி சேரம், அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா அணித் தலைவராக செயற்படுவார் என்று உபுல் தரங்க குறிப்பிட்டார். இலங்கை ஒருநாள் அணித் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணியின் உப தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 21 பேர் கொண்ட முதற்கட்ட குழாத்தை கடந்த வாரத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது 17 பேர்கொண்ட இறுதி ஒருநாள் குழாத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி இறுதி ஒருநாள் குழாத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழாத்தில் காணப்பட்ட சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், அசித பெர்னாண்டோ மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் விளையாடிய திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், குசல் பெரேரா, துஷான் ஹேமந்த மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒருநாள் குழாம்: குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜனித் லியனகே, துனித் வெள்ளாலகே, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுசான், டில்ஷான் மதுஷங்க, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT