யுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை | தினகரன்

யுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை

நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் களியாட்ட மனோநிலையில் இருந்தமையே நாடு இந்த நிலைமைக்குச் செல்லக் காரணம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். இந்தப் பயங்கரவாத அமைப்பு ஓரிரு வருடங்களில் உருவாகியிருக்க முடியாது. ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் இதன் செயற்பாடுகள் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே கடந்த பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள்

இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ேதசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பாதுகாப்புச் சபையில் பொலிஸ் மாஅதிபரின் கீழ் இல்லை. இவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்குக் கீழேயே உள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கடிதமொன்றை அனுப்புகின்றாராயின் அது நிச்சயமாக ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் சென்றிருக்கும். பொலிஸ்மா அதிபரை மாத்திரம் பதவி விலக்கி அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பயங்கரவாதம் நிலவிய முப்பத்தி இரண்டு வருடங்களில் கூட ஒரே நாளில் இந்தளவு அழிவுகளை, 360 உயிரழப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. நாட்டுக்குச் சேவை செய்தவன் என்ற வகையில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என்று இல்லாமல் நாட்டின் பக்கத்திலிருந்து பேசுகின்றேன். அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கோ அல்லது தனிநபர்களைப் பாதுகாப்பதற்கோ நான் முற்படவில்லை. யதார்த்தத்தின் அடிப்படையில் பேசுகின்றேன்.

32 வருடங்களின் பின்னர் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம். அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தளபதிகளின் பலவீனம் காரணமாக யுத்தம் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டது. இல்லாவிட்டால் யுத்தத்தை முதலே முடித்திருக்க முடியும். இதன் பிரதிபலனாவே நாடு பாரிய அழிவுகளைச் சந்தித்தது. இறுதியில் சரியான நபர்களின் கைகளில் சென்றமையால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.

எல்.ரி.ரி.ஈயினர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துமளவுக்கு குறைந்தது பத்து முதல் பன்னிரண்டு வருடங்கள் எடுத்தன. அவர்களின் நோக்கமும் வேறாக இருந்தது. நாட்டைப் பிளவுபடுத்துவது எல்.ரி.ரி.ஈயினரின் பிரதான நோக்கமாகும். எனினும், தற்போது தலைதூக்கியுள்ள பயங்கரவாதம் தற்கொலைத் தாக்குதலிலேயே ஆரம்பித்துள்ளது. பிழையான வழியில் சென்று தமது மதத்தைப் பிரபல்யப்படுத்துவது அவர்களின் நோக்கமாகும். எல்.ரி.ரி.ஈயினருக்கு சர்வதேச ஒத்துழைப்பு இருந்தது. எனினும் இந்த பயங்கரவாதக் குழுவுக்கு சர்வதேச ஒத்துழைப்பு இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையிலிருந்து மீண்டுவர வேண்டும்.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் மக்கள் ஒரேமாதிரியான கெடுபிடிகளுக்கே முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தாடி வளர்த்துச் சென்றால் முஸ்லிம்கள் என சந்தேகத்தில் சோதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் ஆசீர்வாதத்துடன் அரசியல் பேதத்தை மறந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சரியான பாதையில் நாம் போகவில்லையென்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். முப்பத்திரண்டு வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் களியாட்டமான வாழ்வை வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதனை ஏற்படுத்தியது தவறு அல்ல. அரசியல் வாதிகளும், பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகளும் களியாட்ட வாழ்க்கைச் சூழலுக்குச் செல்லாது, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியிருந்தது. நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பது அரசியல் வாதிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பின் முக்கியஸ்தர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். யுத்தம் இருந்தாலும், பயங்கரவாதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கான பொறுப்பு உள்ளது. அதனை நாம் செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் அனைவரும் களியாட்ட மனோநிலையிலும், அதிகாரத்தைத் தக்கவைப்பது, வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது போன்ற மனோநிலையிலேயே இருந்தோம். தற்போது உலகில் இடம்பெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமது நாட்டுக்கும் பாதிப்புக்கள் வரலாம் என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கவில்லை. சில சில இடங்களில் இதுபற்றிக் கூறப்பட்டபோதும் முக்கியமாக கவனம் செலுத்தப்படவில்லை.

நாட்டின் பாதுகாப்பு என்பது முதலாவது முன்னுரிமையான விடயமாகும். அதன் பின்னர் பொருளாதாரம். நாட்டில் உறுதியான பாதுகாப்பு இருந்தாலே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். கொழும்பு நகரின் அளவைக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பயிற்சியளிக்க 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்குவது சிங்கப்பூராகும். யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது நாட்டில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஒரு நாட்டின் பாதுகாப்பு பலவீனமான நிலையில் உள்ளது என்றால் பொறுப்புக் கூறும் நபர்கள் சரியான முறையில் செயற்படவில்லையென்றே அர்த்தப்படுகிறது. எந்தக் கட்சியிலிருந்தாலும் இதிலிருந்து எம்மால் விலகிக் கொள்ள முடியாது.

கடந்த சில தினத்துக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வுப் பிரிவு முன்னெச்சரிக்கை விடுத்ததாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பாதுகாப்புச் சபையில் பொலிஸ்மா அதிபரின் கீழ் இல்லை. இவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்குக் கீழேயே உள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கடிதமொன்றை அனுப்புகின்றாராயின் அது நிச்சயமாக ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் செல்லும். அந்தக் கடிதத்துக்கு அமைய செயற்படவில்லையெனக் கூறி பொலிஸ்மா அதிபர் மாத்திரம் குறைகூறுவது நியாயமானதா? ஜனாதிபதிக்கு இதன் பிரதியொன்று சென்றிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையை வாரத்துக்கு ஒருதடவை கூட்டியிருந்தால் இந்தக் கடிதம் தொடர்பில் கலந்துரையாடியிருக்க முடியும். இப்படியான கடிதமொன்று வந்திருந்தால் உடனடியாக பாதுகாப்புச் சபையக் கூட்டியிருக்க வேண்டும். பொலிஸ்மா அதிபரை வீட்டுக்கு அனுப்புவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. எமது அரசாங்கமாகவிருந்தாலும் பொலிஸ்மா அதிபரை மாத்திரம் சாட முடியாது. பொலிஸ்மா அதிபரைவிட உயர்மட்டத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர் இருக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வீதிச் சோதனைச் சாவடிகளைத் தொடர்ந்தும் பேணி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தி அதன் ஊடாக நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம் என அப்போதைய ஜனாதிபதியிடம் நான் யோசனை முன்வைத்திருந்தேன். எனினும் இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவில்லை. மறுசீரமைப்புச் செய்கின்றோம் எனக் கூறி தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரை வீட்டுக்கு அனுப்புவதில் பயனில்லை. அப்பிரிவை பலப்படுத்துவதற்Nகு நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் என்னைப் போன்ற அதிகாரிகளின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்கே புலனாய்வுப் பிரிவு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இருந்த எந்தவொரு அரசாங்கமும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு கடந்த 10 வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் யாவும் பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறான பயங்கரவாதம் இரண்டு மூன்று வருடங்களில் உருவாக முடியாது. எல்.ரி.ரி.ஈயினருக்கு முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த 12 வருடங்கள் சென்றது. ஆகக்குறைந்தது ஏழு எட்டு வருடங்களின் பின்னரே இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த ஏழு எட்டுப் பேர் மாத்திரமில்லை, மேலும் முந்நூறு, நாநூறுபேர் இருப்பார்கள். பிரபாகரன் போன்று தலைவர் ஒருவர் உருவாகியிருப்பார். எனவே ஏழு எட்டு வருடங்களில் உருவான இந்த பயங்கரவாத குழு தொடர்பில் சகல அரசாங்கத்துக்கும் பொறுப்புள்ளது. இந்தப் பிழையை நாம் ஏற்றுக்கொண்டு தவறைத் திருத்தவேண்டும்.

ஜனாதிபதியுடன் எனக்கு எந்தவித தனிப்பட்ட விரோதமும் இல்லை. நாட்டில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி சிங்கப்பூரிலிருந்து சிறிய ஒலிப் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அன்றையதினம் நள்ளிரவு 12 மணிக்கே நாடு திரும்பினார் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு பிற்பகல் 3 மணிக்கும், இரவு 9 மணிக்கும் இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் கொழும்புக்கு வந்திருந்தன. மருத்துவ பரிசோதனையாக இருந்தாலும் உடனடியாக அதனை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்க முடியும். இதுபோன்று பல இடங்களில் நாம் எமது பலவீனத்தைக் காண்பித்துள்ளோம்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...