அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல் | தினகரன்

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்திகதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அ.தி.மு.க., அ.ம.மு.க. சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இன்னும் 2, 3 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இத்தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் புதன்கிழமை காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.

எதிர்வரும் 29-ந்திகதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 30-ந்திகதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அடுத்த மாதம் 2-ந்திகதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...