Tuesday, March 19, 2024
Home » சமூகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயற்படும் தேசமான்ய சந்திரவதணா ரட்ணராஜா குருக்கள்

சமூகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயற்படும் தேசமான்ய சந்திரவதணா ரட்ணராஜா குருக்கள்

தனது சமூக சேவை தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய செவ்வி

by gayan
January 4, 2024 9:08 am 0 comment

சமூகப் பணிகளின் மூலம் கண்டியில் மிகவும் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்ற ஒரு பெண்மணி தேசமான்ய சந்திர வதணா ரட்ணராஜா குருக்கள். அவர் கணவர் ரட்ணராஜா குருக்கள். சமயக் கிரியைகளை உணர்வுடனும் சமயம் ஆன்மீகம் தொடர்பான புலமைத்துவ நெறியுடனும் நீண்ட காலமாக கடமையாற்றி வருபவர். தனது சமூக செயற்பாடுகள் தொடர்பாக சந்திரவதணா ரட்ணராஜா குருக்கள் தான் கடந்துவந்த பாதை குறித்து தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

உங்கள் பல்கலைக்கழக பிரவேசமும் இடைவிலகலும் பற்றிக் கூறுவீர்களா?

கண்டி பேராதனை வைத்தியசாலையில் எனது சிற்றப்பா அம்பிகாவதி கடமையாற்றினார். நாங்கள் சிறிய வயதில் கண்டிக்கு பெரஹரா பார்க்க வந்த சமயம் முதன் முதலில் எனது கணவருடைய அறிமுகம் கிடைத்தது. எனினும் அப்பொழுது நான் யாழ்ப்பாணத்தில் லேடிஸ் கொலோஜில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் விஞ்ஞானப் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டேன். அப்பல்கலைக்கழகம் கிடைத்து ஒரு வாரம் கூட அங்கு கற்க முடியவில்லை. அங்கு பிரச்சினை நிலவியது. அதன் காரணமாக அங்கு நிலவிய ஆரம்ப கால யுத்த கெடுபிடிகளின் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றப்பட்டு கண்டிக்கு வந்தேன்.

அப்பொழுது 1985, 1986 காலப் பகுதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டக் காலப்பகுதியாகும். அப்பொழுது அங்கு கல்வி பயின்று கொண்டிருக்கும் கால கட்டத்தில் அடிக்கடி பல்கலைக்கழகம் இழுத்து மூடப்படுவதும், திறக்கப்படுவதும் மாணவர்கள் கைது செய்யப்படுவதுமான கெடுபிடி நிலைமை இருந்தன.

அப்பொழுது ஒரு நாள் நானும் எனது நண்பி ஒருவரும் குறிஞ்சிக் குமரன் கோயிலுக்குச் சென்று விட்டு பின்னால் உள்ள வீதியால் விடுதி திரும்பும் போது வீதியில் வைத்து பொலிஸாரின் சுற்றிவளைப்பில் நாங்கள் இருவரும் சிக்கிக் கொண்டோம். எங்களை பிடித்துக் கொண்டு சென்று மைதானத்தில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்தார்கள். பொலிஸ் வாகனத்தில் முகம் மூடியிருந்த நபர் தலையினை ஆட்டியதால் எப்படியோ தப்பி விடுதிக்குச் சென்று விட்டோம்.

இவ்வாறு அடிக்கடி பல்கலைக்ககழம் மூடப்படும் திறக்கப்படுவதுமாக இருந்தது. ஆனால், அப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு என்னை அழைத்துச் செல்வதற்கு அங்கு இருந்து வருவதில் பல சிரமங்கள் இருந்தன. இக்கால கட்டத்தில் ஒரு தடவை பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது. ஊரில் இருந்து அன்று யாரும் வரவில்லை. அக்காவின் அத்தாதான் வந்தார். கண்டி ஸ்ரீ கதிரேசன் கோயிலுக்கு கூட்டி வந்து அங்கு தங்க வைத்தார். இரு நாள் ஸ்ரீ கதிரேசன் கோயிலில் தங்கினேன். அத்தோடு ஊரடங்குச் சட்டம் போட்டு விட்டார்கள். எங்கேயும் போக முடியாத நிலை ஏற்பட்டது. சித்தப்பா உணவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து தந்து விட்டுச்சென்று விட்டார். மறுநாள் அக்காவின் அத்தான் வந்தார். அப்பொழுது அவர் ரட்ரா​ைஜ குருக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அந்நேரத்தில் பெரியளவில் அவர் யார் என்று கவனத்தில் கொள்ள வில்லை. அவர் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை துணைவராக வருவார் என்ற நான் எதிர்பார்க்கவில்லை. படிக்கின்ற ஆர்வம் இருந்தமையால் அதைப் பற்றி யோசிக்கின்ற மனப்பழக்கம் அப்பொழுது இருக்கவில்லை. கண்டு பேசின பழக்கம் மட்டும்தான்.

அப்படியாயின் உங்கள் திருமண பந்தம் எப்படி ஆரம்பமாகின்றது என்று கூறுவீர்களா?

என் தந்தையுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரடியாக வீட்டுக்கு திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒப்புதல் தெரிவித்திருந்தார். முதலாவது தடவை கண்டிப் பெரஹராப் பார்க்கச் சென்றிருந்த வேளையிலும் இரண்டாவது கோயிலில் தங்கிய வேளையிலும் மூன்றாவது தடவையாக எதேச்சையாக புகை வண்டியில் சந்தித்துப் பேசினார். மூன்றாவது தடவை புகை வண்டியில் சந்தித்த போது அவருடன் கதைக்க வில்லை. அதற்குபின்னர் எங்கள் வீடு தேடி வந்து என் தந்தையுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அப்பொழுது அப்பா என் அக்காவை திருமணம் செய்வதற்காக விருப்பம் கேட்டிருந்தார் என எண்ணிக் கொண்டார். அப்பொழுது அக்காவுக்கு மாப்பிளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் அக்காவைத் தான் திருமணம் செய்யப் போகிறார் என்று நினைத்து அப்பா அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். எனினும் பின்பு அக்காவை அல்ல என்னைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக என் கணவர் அப்பாவிடம் தெரிவித்திருந்தார்.

அப்பா குகதாச சர்மா. அம்மா பெயர் நாகேஸ்வரியம்மா. மலையகத்தில் ஹட்டன் லக்சபான குரூப் தோட்டத்தில் தோட்ட அதிகாரியாக கடமையாற்றினார். அவர் அங்கு சுமார் 35 வருடம் கடமையாற்றியவர். அப்பா வாக்கு கொடுத்தால் மாற மாட்டார். ஒரு நேர்மையான மனிதன், எனினும் எனது தாய் அவர் ஒரு குடும்பத்தில் ஒருவரை பேசி வைத்திருந்தார். அவர் அப்படி பேசி வைத்திருந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் எப்பொழுதும் அப்பாவின் பேச்சினையே கேட்பேன். இவ்வாறு எனக்கு நடக்கவுள்ள திருமணம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் எவையேனும் பெரியளவில் ஒன்றும் தெரியாது. என் அண்ணா தொலைபேசி தொடர்பு கொண்டு ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அண்ணனுக்கு எனது திருமண விடயம் தெரியாது. அண்ணனே கூட்டி வந்தார். வீட்டின் வாசற்படி ஏறியதுடன் அம்மா ஒரு சமிஞ்ஞை காட்டினார். எனக்கு அது புரியவில்லை. அப்பொழுது அப்பா என்னிடம் நான் கேட்பதற்கு ஒரே ஒரு பதில் சொல்ல வேண்டும். அது ஆம் அல்லது இல்லை என்று மட்டும் கூற வேண்டும் என்று கூறினார். ஆம் என்றுதலை அசைத்தேன்.

ஆனால் அப்பா எந்த விடயமாக இருந்தாலும் வாக்கு கொடுத்து அதனை நிறைவேற்றி வைப்பவர். அந்த வகையில் எனது கணவரின் கோரிக்கைக்கு இணங்க அப்பா அம்மா குடும்பத்தவர்களின் ஆசிர்வாதத்துடன் 1987 இல் எனக்கு திருமணம் முடிந்தது.

அப்பொழுது கணவர் கண்டி ஸ்ரீ கதிசேரன் கோயிலில் சமய குருவாகச் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு சில வருடம் வசித்து வந்தோம். இக்கோயிலுக்கு பெரு எண்ணிக்கையிலான சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வருகை தருவார்கள். இரு சமூகங்களுக்கிடைய என் கணவர் நல்ல நன்மதிப்பை பெற்றிருந்தார். கண்டி தலதா பெரஹரா காலத்தில் அவருக்கு முக்கிய மதிப்பு கொடுக்கப்படும். யானைகளின் பின்னால் அரச உடையணிந்து கம்பீரத்தோடு பெரஹர ஊர்வலத்தின் போது கண்டி நகர் எங்கும் வலம் வருவார்.

நீங்கள் அரச உத்தியோகத்தராக குறிப்பிட்ட காலம் சேவையாற்றியதாக நாம் அறிவோம். அவை பற்றிக் கூறுவீர்களா?

அக்கால கட்டத்தில் நாவலப்பிட்டியில் சட்டத்தரணி விவேகானந்தர் அவர்களிடம் லிகிதராகக் எட்டு மாதம் கடமையாற்றினேன். அதன் பின்பு நீதி மன்றத்தில் பணிபுரிவதற்காக அரச நியமனம் கிடைத்தது. குறிப்பிட்ட காலம் அங்கு வேலை செய்தேன். காரணம். அப்பொழுது தட்டச்சுக்களை நன்கு செய்வேன். நீதி மன்றத்திலும் அலுவலக வேலைகளைச் செய்வதற்காக இணைத்துக் கொண்டார்கள். மூன்று மாதம் நீதிமன்றத்தில் பணிபுரிந்தேன்.

தோட்டப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினேன். முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வி. இராதாகிருஸ்ணன்தான் அந்த நியமனத்தைப் பெற்றுத் தந்தார். அவர் மத்திய மாகாண இந்து சமய கல்வி அமைச்சராக இருக்கின்ற காலத்தில் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அப்படியே எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் இடைவிலகி விட்டேன். இது குறித்து இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் என்னைக் காணும் போதெல்லாம் விஞ்ஞானம் கற்பிக்கக் கூடிய ஓர் ஆசிரியர். இடை விலகி இருக்கிறார் என்று நினைவூட்டுவார். நீண்ட காலமாக எனது இடை விலகலை ரத்துச் செய்யாமல் அப்படியே வைத்திருந்தார். அவர் என் தந்தையின் குடும்ப நண்பர். எங்களோடு குடும்ப உறவினர்களைப் போன்று பழகுவார். அவரின் மனைவி என் தங்கையின் நண்பி ஆவார். என் மகளின் பரத நாட்டிய அரங்கேற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

உங்களுடைய கலாசாரப் பண்பாட்டு அம்சங்கள் பற்றி கூற முடியுமா?

சிறு பராயத்தில் பறங்கிய குடும்பத்தினர்கள்தான் நாங்கள் வாழ்ந்த தோட்டத்தில் இருந்தனர். அவர்கள் கணிசமானளவு மேற்கத்திய கலாசார அம்சங்களைக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தாக்கம் எங்களுடைய வாழ்க்கை முறையிலும் சிற்சில காணப்பட்டன. அப்பாவுடன் பறங்கியர்கள் வேலை செய்தார்கள். அவர்களுடைய பிள்ளைகள்தான் என்னுடைய சிநேகிதர்கள். அவர்களுடைய பிறந்த நாள் நிகழ்வு ஏனைய கலாசார நிகழ்வு என்பன அங்கு நடைபெறும். நாங்களும் தவிர்க்க முடியாமற் கலந்து கொள்ளுவோம். அம்மா சரியான இந்து சமய பக்தர். அவர் கோயில் சமய கிரியை என்று எங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்வார்.

மலையக மக்களோடு ஒன்றித்த இந்து சமய அறிவு வளர்ச்சிக்கப்பால் பறங்கியர்களுடைய மனித வாழ்க்கையின் நாகரீக வளர்ச்சியும் பின்னிப்பிணைந்து இருந்தது. அதன் பிறகு கணவனுடைய இந்து சமயப் சமயப் பணியின் அறிவின் பால் ஈர்க்கப்பட்டு உண்மையான மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அதனைப் பயன்படுத்த உணர்ந்தவளாய் அதன் கோட்பாட்டை அறிந்து இந்து சமய திருமணச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தி வருகின்றேன். இதன் மூலம் மகிழ்ச்சிகரமான திருமண பந்தங்கள் இந்து சமய நியதிகளின் அடிப்படையில் நடத்தி எண்ணற்ற குடும்பத் தம்பதிகளுடைய நல்லாசீர்வாதங்களைப் பெற்று வருகின்றேன்.

நேர்காணல் : ஜீவராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT