Friday, April 26, 2024
Home » 2024 முதல் காலாண்டு முடிவில், மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும்

2024 முதல் காலாண்டு முடிவில், மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும்

- தற்போதுள்ள வரிக் கொள்கையால் எதிர்காலத்தில் பல சலுகைகள் கிடைக்கும்

by Rizwan Segu Mohideen
January 3, 2024 6:46 pm 0 comment

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நலின் பெனாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலின் பெனாண்டோ,

2024ஆம் ஆண்டை பொருளாதார வேகத்துடன் ஆரம்பிக்கின்றோம். இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என்பதைக் குறிப்பிட வேண்டும். தற்போதுள்ள வரிக் கொள்கையால், எதிர்காலத்தில் பல சலுகைகள் கிடைக்கும் என உறுதி செய்ய முடியும்.

வரி விதிப்பு தவறு என்று யாராவது கூறினால், அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். நாட்டிற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் இருந்து நாட்டின் எதிர்காலத்துக்காக முதலீடுகள் செய்யப்படுமானால், அதற்குத் துணை நிற்க வேண்டியது ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகும்.

நாட்டின் வருமானம் குறைவு, வரி அதிகம் என்று ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மொத்தமாக எடுத்துக்கொண்டால், எமது நாட்டில் 12% என்ற அளவிலேயே வரி வசூலிக்கப்படுகின்றது. ஆனால் நாட்டை விட்டு வெளியேறி தொழிலுக்காகச் செல்லும் நாடுகளின் வரி சதவீதம் 38% முதல் 43% அளவில் உள்ளது. அந்நாடுகளில் இத்தகைய வரிவிதிப்பு முறைகள் இருப்பதனால் அந்நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியதால், நாட்டிற்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் வெங்காய ஏற்றுமதியை இந்தியா எளிதாக்கிய பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

எனினும், வற் மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பாக எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், ஊடகங்கள் மூலமாகவும், பல்வேறு வழிமுறைகள் மூலமாகவும் முறையற்ற வகையில் விளம்பரம் செய்வதே எமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என நம்புகின்றோம். இந்நிலையில் இடைத்தரகர்களும், நிறுவனங்களும் தமது விருப்பத்துக்கு விலையை உயர்த்துவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், லங்கா சதொசவினால் 05 புத்தம் புதிய மெகா (mega) விற்பனை நிலையங்களையும் 10 சாதாரண லங்கா சதொச விற்பனை நிலையங்களையும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், வருட இறுதிக்குள் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், லங்கா சதொச நிறுவனத்தின் மொத்த வருமானத்தை சுமார் 70 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலம் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிறுவனத்தின் மொத்த இலாபம் 1.5 பில்லியன் ரூபாவாகவும், நிகர இலாபம் 500 மில்லியன் ரூபாவா வரை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு மானிய விலையில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே சதொச விற்பனை நிலைய வலையமைப்பு 500 ஆக விரிவுபடுத்தப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டில், நுகர்வோர் அதிகார சபைக்கான புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அளக்கும் அலகுகள் தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல் நான்கு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT