நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூடு; பலர் உயிரிழப்பு | தினகரன்

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூடு; பலர் உயிரிழப்பு

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பலர் உயிரிழந்தும் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களில் இதுவரையில் 27 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  எனினும்,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுவதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கிரைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களிலேயே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீரென்று துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாகவும், தொழுகையில் ஈடுபட்டிருந்த பெருமளவானோர் இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆண்கள் மூவரையும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற இரு பள்ளிவாசல்களும் பாடசாலைகளும்  மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன. 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் எத்தனை பேர்  தொடர்புபட்டுள்ளனர் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்தச் சம்பவங்களில் காயமடைந்தவர்களில் மலேசியர் ஒருவர் அடங்குவதாக  மலேசிய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 
இதேவேளை, கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு ஊடகவியலாரொருவர் கூறியுள்ளார். 
 

Add new comment

Or log in with...