திறைசேரி பச்சைக்ெகாடி காட்டட்டும்! | தினகரன்

திறைசேரி பச்சைக்ெகாடி காட்டட்டும்!

வாழைச்சேனை காகித ஆலையை மீண்டும் இயங்க வைக்க முயற்சி

'வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையில் தற்போது இயங்கும் நிலையிலுள்ள அட்டை தயாரிக்கும் இயந்திரத்தை இயங்க வைத்தால் மீண்டும் ஆலையின் உற்பத்தியை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்' என தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கூட்டுத்தாபனத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்கு விஜயம் செய்த தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கணேசமூர்த்தி,ஆலை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தினார்.ஆலையின் கேட்போர் கூடத்தில் அச்சந்திப்பை அவர் நடத்தினார்.

"வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை மீள இயக்கச் செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நான் முயற்சித்து வருகின்றேன். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோருடனும் பேசி உள்ளேன்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை மீள்ேபுனரமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும் என்று பணிப்பாளர் சபைக் கூட்டத்திற்கு திறைசேரியில் இருந்து வந்தவர்களிடம் தெரிவித்தேன். இன்றைய சூழ்நிலையில் பல பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை மீண்டும் கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு என்னிடம் உள்ளது. குறிப்பாக மின்சார சபைக்கு கடதாசி கூட்டுத்தாபனத்தினால் 400 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இதனை முதலில் செலுத்த வேண்டும்.

நீர் விநியோகத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து ஆலை இயங்கக் கூடிய நிலைமைகளை தெளிவாக ஆராய்ந்து அமைச்சருக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளேன்.

தற்போது இங்கு இரண்டு இயந்திரங்கள் உள்ளன. அதில் அட்டை தயாரிக்கும் இயந்திரம் இயங்கக் கூடிய நிலையில் காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் அதன் தொழில்நுட்ப அறிக்கையை பெற்ற பின்னர் இயந்திரத்தை இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன். இயங்கும் நிலையில் உள்ள இயந்திரத்தை இயங்க வைத்தால் மீண்டும் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தியை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றேன்.

நிதியமைச்சின் திறைசேரி பச்சைக் கொடி காட்டும் பட்சத்தில், அமைச்சினால் சமர்ப்பிக்கின்ற அறிக்கையை ஏற்றுக் கொண்டு ஆலையை இயங்க வைக்க ஒத்துழைப்புத் தர நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆலையை மீள ஆரம்பிக்க பல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். ஆகவே அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலையை மீளப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூட்டுத்தாபனத் தலைவர் கணேசமூர்த்தி விபரித்தார்.

"இவ்வாலையை புனரமைக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இன இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க இது பாரிய உதவியாக அமையும்" என்றார் அவர்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் கணக்காளர் எஸ்.அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைமைக் காரியாலய அதிகாரி எஸ்.சரித், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான எம்.எல்.லத்தீப், ஏ.ஏ.முஹமட் ரூபி, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.ஜௌபர், ஏ.ஜி.அமீர், எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஆலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது காகித ஆலை பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடும் காகிதஆலை பள்ளிவாயலில் மத வழிபாடுகளும் நடைபெற்றன.

 

எஸ்.எம்.எம்.முர்ஷித்
(கல்குடா தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...