அனைத்து அரச பாடசாலைகளும் 29 இல் ஆரம்பம் | தினகரன்

அனைத்து அரச பாடசாலைகளும் 29 இல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

அனைத்து அரசாங்க பாடசாலைகளும் முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக நேற்று (22) திறக்கப்படவிருந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களால் நேற்றும், இன்றும் (22ஆம் 23ஆம் திகதி) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகள், முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானதோடு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய  17, 18 ஆம் திகதிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.

இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதியும், மே 04 ஆம் திகதியும் பதில் பாடசாலைகள் நடத்தப்படும் என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அறிவித்திருந்தார்.

எனினும், நாளை (24) ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள், தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வசாதாரண சூழ்நிலை கருதி பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...