'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக' | தினகரன்

'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'

உயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்

இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்!” என்று முதல் சீடர்கள் முழங்கியதை திருஅவை புதுப்பிக்கின்றது. “அல்லேலூயா, அல்லேலூயா!” என்ற வாழ்த்தொலி ஒவ்வொரு சொல்லிலும் இதயத்திலும் எதிரொலிக்கின்றது.

என்றும் இளமையாய் இருக்கின்ற திருஅவைக்கும் மனித சமுதாயம் அனைத்திற்கும் இளையோர்க்கென அர்ப்பணிக்கப்பட்ட எனது அண்மை திருத்தூது அறிவுரை ஏட்டின் முதல் வார்த்தைகளான “கிறிஸ்து வாழ்கிறார்!” என்ற சொற்களில் உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன்.

கிறிஸ்து வாழ்கிறார்! அவரே நம் நம்பிக்கை. வியப்பான முறையில் அவர் இளமையை நம் உலகுக்குக் கொணர்கிறார். அவர் தொடுகின்ற ஒவ்வொன்றும் இளமையாக புதியதாக  முழுமையான வாழ்வாக மாறுகின்றன.

கிறிஸ்து வாழ்கிறார்! மற்றும் நீங்கள் உ.யிர்த்துடிப்புடன் வாழ வேண்டுமென இளம் கிறிஸ்தவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அவர் உங்களில் இருக்கின்றார். அவர் உங்களோடு இருக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.

நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அங்கே உயிர்த்தெழுந்த கிறிஸ்து எப்போதும் இருக்கின்றார். அவர் உங்களை அழைக்கின்றார். தம்மிடம் திரும்பிவந்து வாழ்வை மீண்டும் தொடங்க வேண்டுமென அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். துயரத்தால் சினத்தால் அல்லது அச்சத்தால் சந்தேகத்தால் தோல்வியால் நீங்கள் வயது முதிர்ந்ததைப்போல் உணரும்போது உங்கள் வலிமையையும் உங்கள் நம்பிக்கையையும் நிலைநிறுத்த அவர் எப்போதும் அங்கே இருக்கின்றார்.

அன்புச் சகோதர சகோதரிகளே இந்தச் செய்தி உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்குமெனவும் வழங்கப்படுகின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் புது வாழ்வின் மற்றும் இதயத்திலிருந்தும் மனச்சாட்சியிலிருந்தும் தொடங்கும் உண்மையான புதுப்பித்தலின் கோட்பாக அமைந்துள்ளது.  மேலும் கிறிஸ்துவின் உயிர்ப்பு, பாவம் மற்றும் மரணத்தின் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கும் புதிய உலகின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. அப்புதிய உலகம் அன்பு, அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்விற்கும் என்றும் நிலைத்திருக்கும் இறையாட்சிக்கும் வழி திறக்கின்றது. 

கிறிஸ்து வாழ்கிறார்! அவர் நம்மோடு இருக்கின்றார். அவர் தம் உயிர்ப்பால் தம் திருமுகத்தின் ஒளியை நமக்குக் காட்டுகின்றார். கடினவாழ்வு வேதனை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் அவர் கைவிடுவதில்லை.

உயிரோடு இருக்கும் அவர் தொடர்ந்து இடம்பெறும் போருக்குப் பலியாகியுள்ள  நம் அன்புக்குரிய மக்களின் நம்பிக்கையாக இருப்பாராக.

உயிர்ப்பு விழா தொடரும் பிளவுகளாலும் மோதல்களாலும் சிதைந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் மீது நம் கண்களைப் பதிக்க வைக்கிறது. சாவை வென்று வாழ்வாக உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகளாக வாழ்வதில் அப்பகுதியில் வாழும் மக்கள் விளங்குவார்களாக! தங்கள் இல்லங்களைவிட்டு மக்கள் வெளியேறும் வண்ணம், லிபியாவில் நிகழ்ந்துவரும் மோதலும், இரத்தம் சிந்தலும், நின்று,  அங்குள்ள தலைவர்கள், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

இன்றைய காலத்தில் நிலவும் துன்பங்களுக்கு முன்  நாம் அக்கறையற்றுப் போகாமல் இருக்க இறைவன் உதவட்டும்.

சுவர்களை அல்ல  பாலங்களை அமைப்பவர்களாக நம்மை உருவாக்கட்டும். போர்க்களங்களிலும் நமது பெருநகரங்களிலும் கொலைக் கருவிகளின் ஓசையை நிறுத்தும் அமைதியை அவர் வழங்கட்டும்.

கல்லறையின் கதவுகளைத் திறந்த உயிர்த்த கிறிஸ்து,நமது உள்ளங்களையும் திறப்பாராக. நமது கதவுகளைத் தட்டும் வறியோர், வலுவற்றோர், வேலையற்றோர், சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் ஆகியோருக்கு உதவிகள் செய்ய வரமளிப்பாராக.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்து வாழ்கிறார்! அவரே நமக்கும், இவ்வுலகமனைத்திற்கும் நம்பிக்கையாய் இளமையாய் விளங்குகிறார். அவர் நம்மைப் புதுப்பிக்க நம்மையே வழங்குவோம்!(ஸ)

(மேரி தெரேசா)


Add new comment

Or log in with...