தேசத்தின் பாதுகாப்பே பிரதானம்! | தினகரன்

தேசத்தின் பாதுகாப்பே பிரதானம்!

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான நேற்றுமுன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களால் 290 இற்கும் அதிகமான அபபாவிப் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து உருவான பதற்றமும் பீதியும் இன்னுமே தணியவில்லை.

குண்டுத் தாக்குதல்களில் அகப்பட்டு மரணமடைந்து போனவர்களின் உடல்களையும், சோகம் தாளாமல் கதறியழுகின்ற உறவினர்களின் பரிதாப நிலையையும் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்ற போது துயரம் நெஞ்சைப் பிழிகின்றது.

புனிதம் நிறைந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில், காட்டுமிராண்டித்தனமான குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பலியாகிப் பான அந்த அப்பாவிகள் இழைத்த பாவம்தான் என்ன? அதுவும் சிறுகுழந்தைகளும் வயோதிபர்களும் பெண்களுமாக எத்தனை பேரைப் பலிவாங்கியிருக்கிறார்கள் அந்தக் கொடியவர்கள்!

ஆண்டவனின் சந்நிதானத்தில் வைத்து, பக்தர்களை இலக்கு வைத்து இவ்வாறான கொடிய தாக்குதல்களை மேற்கொண்டவர்களை மனித இனத்துக்குள் எவ்வாறுதான் உள்ளடக்குவது?

கொல்லப்பட்டோரும், காயமடைந்தோருமாக அத்தனை பேருமே அப்பாவிகள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. உலக மக்களை இரட்சிப்பதற்காக அவதரித்த இயேசுநாதரின் உயிர்த்தெழுந்த தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு, தங்களது மதவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களை இலக்கு வைத்து கொலைத் தாக்குதல் நடத்துவதென்பது எத்தனை அக்கிரமம்!

குண்டுவெடிப்பில் அகப்பட்டு பலியாகிப் போனோரின் உடல்களையும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் கிடக்கின்ற கோலத்தையும் பார்க்கின்ற போது, உள்ளத்தில் எழுகின்ற துயரத்தை அடக்க முடியாதிருக்கின்றது.

ஊடகங்களில் இக்காட்சிகளைக் காண்கின்றவர்களுக்கே இத்தனை தாங்க முடியாத சோகம் ஏற்படுமென்றால், உறவுகளைப் பறிகொடுத்து நிற்போரின் மனத்துயரத்தை என்னவென்று விபரிப்பது!

மனித நேயம் என்பது சற்றேனும் இல்லாதவர்களால் மாத்திரமே இவ்வாறான ஈவிரக்கமற்ற கொடிய செயல்களில் ஈடுபட முடியுமென்பது மட்டும் உண்மை.

மத நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்புகின்ற ஒவ்வொருவருமே இச்சம்பவத்தினால் மனக்கொதிப்பும் வேதனையும் அடைந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களை இழந்து தவிக்கும் உறவினர்கள் இந்த ஆறாத்துயரைத் தாங்கிக் கொள்வதற்கான மனோதிடத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே சமாதான விரும்பிகளின் வேண்டுதலாக இருக்கின்றது.

அதேசமயம், குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமான அத்தனை சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் மனிதநேயம் மிகுந்தவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்கள் சாதாரணமானவையல்ல... இச்சம்பவங்களின் தீவிரத்தை எவரும் இலகுவில் மறந்து விடவும் முடியாது. அத்துடன் இது போன்ற சம்பவமானது மீண்டும் இடம்பெற மாட்டாதென்பதற்கும் எதுவித உத்தரவாதமும் இல்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏக காலத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்கள் யாவும் வலைப்பின்னல் முறையில் நன்கு திட்டமிடப்பட்டுள்ளவாறு நடந்தேறியுள்ளன. இச்சம்பவங்களுக்கு பலம் வாய்ந்த பின்னணி உள்ளதென்பது நிட்சயம். தாக்குதல்தாரிகள் இத்தனை பாரிய தாக்குதல்களை பல்வேறு இடங்களிலும் எவ்வாறு ஏக காலத்தில் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதுவும், அவர்களுக்கு எவ்வாறு இத்தனை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கிடைத்தன என்பதுவும் ஆச்சரியமான விடயங்கள்!

மிகப் பலம் வாய்ந்த பின்னணி இல்லாமல் இது போன்ற பாரிய தாக்குதல்களை ஒருபோதுமே திட்டமிட்டு நடத்தி விட முடியாது.

எனவே, இத்தாக்குதல் சம்பவங்களையெல்லாம் நன்கு உற்றுநோக்குகின்ற போது, நாட்டின் தேசிய பாதுகாப்பு மீதான அக்கறையே தேசத்தை நேசிப்போரின் உள்ளத்தில் முதலில் எழுகின்றது.

எமது தேசத்தின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதே பலரதும் கோரிக்கையாக இருக்கின்றது. இல்லாது போனால் இது போன்ற நாசகார செயல்களில் ஈடுபடுகின்ற கும்பல்கள் தங்களது அழிவுச் செயல்களை மேலும் தொடர்வதற்கான வழி ஏற்பட்டு விடக் கூடும்.

எமது தாயகத்தை மூன்று தசாப்த காலமாகச் சீரழித்த கொடிய யுத்தம் ஓய்ந்து போய் பத்து வருடங்களாகப் போகின்றது. யுத்தம் ஓய்ந்து விட்ட இந்த பத்தாண்டு காலப் பகுதியில் நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத போதிலும், மக்கள் மத்தியில் அச்சம் என்பதெல்லாம் நேற்றுமுன்தினம் வரை இருந்ததில்லை. நாட்டின் எந்தவொரு குடிமகனும், எவ்வேளையிலும், நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வரக் கூடியதாக சுமுகமானதொரு சூழல் இதுவரை நிலவி வந்ததென்பதை எவருமே ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது.

எனினும் நேற்றுமுன்தினம் எட்டு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் நிலைமை அவ்வாறில்லை! மக்கள் உண்மையிலேயே அச்சமடைந்து போயிருக்கிறார்கள். ஏனெனில் தாக்குதல்தாரிகள் தேர்ந்தெடுத்த இடங்கள் அத்தனையுமே மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களாக உள்ளன. அதுவும் தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று இடங்கள் வழிபாட்டுத் தலங்கள்! தாக்குதல் நடந்த தினமும் முக்கியம் வாய்ந்த, சமயம் சார்ந்த பரிசுத்த நன்னாள்.

எனவேதான் சாதாரண மக்கள் தமது பாதுகாப்பு கருதி அஞ்ச வேண்டியுள்ளது. இந்த அச்சம் மிகைப்படுத்தப்பட்டதல்ல. அத்தனை உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னர் மக்கள் மனதில் இவ்வாறான அச்சம் தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.

ஆகவேதான் தேசிய நெருக்கடி மிகுந்த இவ்வேளையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை மக்களிடமிருந்து வெளிப்படுகின்றது.

மக்களின் பீதியைப் போக்க வேண்டிய பொறுப்பு எமது பொலிஸாரினதும் படையினரினதும் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

துயரமும் நெருக்கடியும் மிகுந்த இவ்வேளையில், தேசத்தின் நலனைக் கருத்திற் கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அவசியமாகும்.


Add new comment

Or log in with...