லிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு | தினகரன்

லிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு

லிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அறிவித்ததை அடுத்து தலைநகர் திரிபோலியின் தென் பகுதியில் உக்கிர மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதல்களில் 220 பேர் வரை கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கடந்த ஒருசில தினங்களில் இரு தரப்பும் முன்னேற்றம் காணாத நிலையிலேயே இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது.

திரிபோலியை கைப்பற்றும் இலக்குடன் ஜெனரல் கலீபா ஹப்தரின் படை இம்மாத ஆரம்பத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்த மோதல்கள் தொடர்பில் தமது சர்வதேச கூட்டணி மெளனம் காப்பது தொடர்பில் பிரதமர் பாயிஸ் அல் செர்ரா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெனரல் ஹப்தரின் லிபிய தேசிய இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகள் மீது ஏழு வான் தாக்குதல்களை நடத்தியதாக செர்ரா அரசு குறிப்பிட்டுள்ளது.

ஹப்தர் படை தலைநகரில் பல முனைகளால் முன்னேற்றம் கண்டு வருவதோடு திரிபோலி சர்வதேச விமானநிலையத்தையும் கைப்பற்றியது. எனினும் அந்தப் படைக்கு எதிராக பதில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா ஆதரவு அரசு குறிப்பிட்டுள்ளது.

தப்ரூக்கை தளமாகக் கொண்ட முன்னாள் சர்வதேச ஆதரவு அரசினாலே 2015 ஆம் ஆண்டு ஜெனரல் ஹப்தர் லிபிய தேசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு எகிப்து, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

ஜெனரல் ஹப்தருடன் ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிடும் வெள்ளை மாளிகை, அவரது தலைமையின் கீழ் புதிய அரசொன்றை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

லிபியாவில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கோரும் பிரிட்டன் கொண்டுவந்த ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிராகரித்துள்ளன.

“அரசியல் போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம், தீவிரவாதத்திற்கு எதிராகவே எமது படையினர் போராடுவதை உலகத்துக்கு நாம் நம்பவைத்துள்ளோம்” என்று லிபிய தேசிய படையின் பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...