இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள் | தினகரன்

இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப் பாதையாகவிருப்பது குளத்தடி சந்தியில் இருந்து மாணிக்கமடு அரசினர் கலவன் பாடசாலை வரை செல்கின்ற மூன்று கிலோ மீற்றர் தூரமுடைய பாதையாகும்.

மற்றையது ஆலையடி சந்தியிலிருந்து வரிப்பத்தான்சேனை பாலம் வரையான இரண்டு கிலோமீற்றர் தூரமுடைய பயணவழிப்பாதை. இவ்விரண்டு பாதைகளும் இறக்காமம் பிரதேச மக்களின் போக்குவரத்துக்கான பிரதான பாதைகள் ஆகும். அதிலும் முதற்சொன்ன குளத்தடி சந்தியிலிருந்து மாணிக்கமடு வரை செல்கின்ற 3 கிலோ மீற்றர் பாதையில் இறக்காமம் பிரதேசத்தின் பாடசாலைகள், பள்ளிவாசல் மற்றும் பிரதேச சபை, தபால் நிலையம், அரச நிறுவனங்கள் என அத்தனையும் அமையப் பெற்றுள்ளன. ஆனால் போக்குவரத்து பாதையின் நிலையோ கவலைக்கிடமாகும்.

இவ்விடயம் பற்றி எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தி கருத்துரைத்தவர்களுள் மிக முக்கியமானவர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளரும், சமூக ஆர்வலருமான கே.எல். சமீம்.

இவர் இது பற்றி எம்முடன் கருத்தப் பரிமாறுகையில், இறக்காமம் பிரதேசத்தின் இவ்வீதிகளை செப்பனிட கடந்த அரசாங்கத்தினால் 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014.05.17ஆம் திகதி முன்னாள் பிரதி அமைச்சர் சரத்வீரசேகரவின் பங்குபற்றுதலுடன் பிரதேச சபை தவிசாளர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் இங்குள்ள ஊர்ப் பிரமுகர்களின் முன்னிலையில் அடிக்கல் நடப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவ்வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. அதற்குரிய காரணங்கள் என்னவென்று இதுவரை இந்த மக்களுக்கு தெரியாதுள்ளது.

விடயம் இவ்வாறிருக்க நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரவூப் ஹக்கீமை இங்குள்ள உள்ளுர் அரசியல்வாதிகள், ஊர்ப் பிரமுகர்கள் சந்தித்து நி​ைலமையினை எடுத்துரைத்தனர். அதன் பலனாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையில், கிழக்கு மாகாண பிரதம செயாலாளரின் நேரடிக் கவனிப்பில் குறித்த வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் பணிகள் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரையில் அந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படவில்லை.

இதன் காரணமாக, இந்த வீதியில் வாகனங்கள் பயணிக்கும் போது, மிக அதிகளவில் புழுதி எழுவதாகவும், அதனால் தாங்கள் கடுமையான சுகாதார மற்றும் சுற்றாடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் அங்குள்ள சிறு பிள்ளைகள் சுவாச நோய்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வீதியில் உள்ள ஹோட்டல்களில் உணவுப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதில் அச்சப்படுகின்றனர். இதனால் வியாபார நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது. வீதி நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதனை காணக் கூடியதாகவுள்ளது.

இதேவேளை, வீதி நிர்மாணத்தின் பொருட்டு பரவப்பட்டுள்ள நொருக்கப்பட்ட கற்களிலிருந்து எழும் புழுதி காரணமாக, இந்த வீதியை அண்டி வாழும் மக்கள், சுகாதார மற்றும் சுற்றாடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை எழுத்து மூலம் தெரிவித்துள்ளதோடு அதனைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதம பொறியியலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும், அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில், இந்த வீதி நிர்மாண வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக இறக்காமத்தைத் சேர்ந்த கே.எல். சமீம் தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த வீதி நிர்மாணம் தொடர்பான விபரங்களையும் அண்மையில் பெற்றிருந்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வீதிக்கான வேலை வழங்குநராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளார். இந்த வீதி நிர்மாணத்துக்கான பொறியியலாளராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதம பொறியியலாளர் கடமையாற்றுகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே இறக்காமம் பிரதான வீதியின் நிர்மாண வேலைகள் இரண்டு வருடங்களாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்த வீதி நிர்மாணத்துக்குரிய வேலை வழங்குநரான கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம். சரத் அபேகுணவர்த்தனவுடன் தொடர்பு கோண்டு பேசிய போது 'சித்திரைப் புதுவருடத்தின் பின்னரும், இறக்காமம் வீதி நிர்மாணத்தில் முன்னேற்றம் காணப்படாது விட்டால், அதற்குரிய ஒப்பந்தகாரருடனான ஒப்பந்தத்தை முடிவுறுத்தி விட்டு, வேறு ஒருவருக்கு இந்த வீதி நிர்மாணப் பணியினை வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும், இந்த வீதி நிர்மாணம் இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் இனியாவது உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே இறக்காமம் பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Add new comment

Or log in with...