மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு; | தினகரன்

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு;

பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்

(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன்,ஆரையம்பதி, நாவற்குடான் தினகரன், பெரியபோரதீவு தினகரன் நிருபர்கள்)

மட்டக்களப்பு நகரிலுள்ள புனித சியோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதுடன் 75க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு நகரிலுள்ள தேவாலயத்தில் இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதுடன் 75க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த 27 பேரில் 14 குழந்தைகளும் 8 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர்.

சம்பவம் இடம் பெற்ற இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றியதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்களுக்கு தேவையான விடயங்களையும் வைத்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதனைத்தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி அலிசாஹீர்மௌலானா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், எஸ்.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்ததிரன் உட்பட கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி உட்பட விமானப் படை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போது நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் தேவையான மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையில் கையிருப்பிலிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டன.

மேலதிகமாக மருந்துப் பொருட்கள் தேவைப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதென இதன் போது ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதைவிடவும் பொலன்னறுவையிலிருந்து விஷேட மருத்துவக் குழுவொன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தட்டுப்பாடு ஏற்பட்டால் காத்தான்குடி வாழைச்சேனை போன்ற அத் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை பாவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்தம் தேவைப்பட்ட போதிலும் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் நலன் விரும்பிகள் வழங்கிய இரத்தத்தையடுத்து போதுமானளவு இரத்தம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிகமாக இரத்தம் தேவைப்பட்டால் அதனைப் பெற்றுக் கொள்வதென்றும் அதைவிடவும் காத்தான்குடி வாழைச்சேனை வைத்தியசாலைகளில் இரத்தம் சேகரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டிகள் மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டன.

தேவைப்பட்டால் அம்பாறையிலிருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு வைபவங்களையும் நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களுடைய சடலங்களை விடுவிப்பதற்காக மேலதிகமாக இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகளை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழிந்தவர்களின் சடலங்களை அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிப்புரையை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் வழங்கியுள்ளார். இது தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் பேசினார்.

அதனடிப்படையில் உயிரிழந்தவர்களுக்காக ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதே போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்படும்.

மட்டக்களப்பு நகர் உட்பட மத ஸ்த்தலங்கள் மக்கள் கூடுமிடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படல் வேண்டுமென இக் கூட்டத்தில் கூறப்பட்டது.

அதற்காக இராணுவத்தினர் பொலிஸார் ஒத்துழைப்பை வழங்குவதென உறுதியளித்துள்ளார்கள்.

பொது மக்கள் கூடுமிடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்படுவதுடன் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது நபர்கள் காணப்பட்டால் பாதுகாப்புத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...