காட்டுமிராண்டித்தனம்! | தினகரன்

காட்டுமிராண்டித்தனம்!

கொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில் நேற்றுக்காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் எமது நாடு பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. எட்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்பது குண்டுத் தாக்குதல் சம்பவங்களை ‘காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்’ என்பதை விட வேறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

நேற்றைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அனைத்தும் தொடர் தாக்குதல்களாகவே அமைந்துள்ளன. மூர்க்கத்தனமான இக்குண்டுவெடிப்பு சம்பவங்களால் 200 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இத்தாக்குதல்களால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 400 ஐயும் தாண்டியிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் நேற்று மாலை வரை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்தோரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.

இக்குண்டுவெடிப்பு சம்பவங்கள் அத்தனையையும் நோக்குகின்ற போது, மூன்று சம்பவங்கள் கிறிஸ்தவ புனித தேவாலயங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஏனைய சம்பவங்கள் ஹோட்டல்களில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் மூன்று ஹோட்டல்கள் பிரபலமானவை.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு புனித கடுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு புளியந்தீவு சியோன் தேவாலயம் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுகின்ற நேரம் பார்த்து நேற்றைய மூர்க்கத்தனமான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கின்ற போது, இத்தாக்குதல்களுக்குத் திட்டமிட்டோரின் இலக்கு எதுவென்பது ஓரளவுக்குப் புரிகின்றது. ஆனாலும் இச்சம்பவங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் கொண்டு, இது பற்றிய பொலிஸ் விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் எவ்விதமான ஊகங்களுக்கும் வந்து விட முடியாது.

உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரை நேற்றைய தினம் மிகவும் புனிதமும் முக்கியத்துவமும் நிறைந்ததாகும். நாற்பது தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த தவக்காலம் கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரை பரிசுத்தம் மிகுந்தது. கிறிஸ்தவ மக்கள் அந்த நாற்பது நாட்களிலும் உபவாசம் இருந்தும், மாமிச உணவுகளைத் தவிர்த்தும் மிகவும் பரிசுத்தமாக இறைவழிபாடுகளில் ஈடுபடுவர்.

அதனையடுத்து கடந்த 19 ஆம் திகதி உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களின் புனித வெள்ளி தினமாகும். இயேசு பெருமான் உலக மக்களுக்காக சிலுவையில் மரித்த தினமான புனித வெள்ளியை தேவாலய ஆராதனைகளுடன் கிறிஸ்தவர்கள் அனுஷ்டித்தனர்.

புனித வெள்ளியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமாகும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக பரிசுத்தமான முறையில் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். நேற்றைய தினமானது நாற்பது நாள் தவக்காலத்தின் முடிவாக, மிகவும் புனிதத்துடன் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.

இத்தனை புனிதம் நிறைந்த நேற்றைய உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு குருதியின் கறை படிந்து விட்டமை மிகவும் வேதனைக்குரியது. நேற்று இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் கிறிஸ்தவ மக்களை மாத்திரமன்றி, இனமத நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் விரும்புகின்ற அனைத்து இன மக்களையும் பேரதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. நாட்டின் ஐக்கியத்தை நேசிக்கின்ற அனைவருமே இத்தாக்குதல் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர். அதேசமயம், உள்நாட்டு அரசியல்வாதிகள் மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றின் அரசியல் தலைவர்களும் மனிதநேய அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

உலக சமாதானத்தையே கிறிஸ்தவ சமயம் என்றும் வலியுறுத்தி வருகின்றது. தன்னைப் போல பிற உயிர்களையும் நாம் நேசிக்க வேண்டுமென்ற உயர்ந்த கோட்பாடு கொண்டது கிறிஸ்தவ சமயம். அமைதி வாழ்வையும், ஐக்கியத்தையும், பிறருக்கு உதவுகின்ற தாராள கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளாகப் போதிக்கின்றது கிறிஸ்தவம்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் போன்ற திருத்தலங்களில் கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி இந்து, பௌத்த மக்களும் வழிபாடு செலுத்த வருவது வழக்கமாகும். கிறிஸ்தவ தேவாலயங்களில் எப்போதுமே உள்ளத்துக்கு அமைதி தருகின்ற நிசப்தம் நிலவுவது வழக்கமாகும். அமைதியான பிரார்த்தனை மூலம் உள்ளத்து அமைதியைத் தேடுகின்ற இந்து, பௌத்த மக்களும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நேற்றைய மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் அனைத்து மக்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளன.

காட்டுமிராண்டித்தனம் நிறைந்த நேற்றைய சம்பவங்களை எவ்வாறான வார்த்தைகள் கொண்டு கண்டிப்பதெனத் தெரியாதுள்ளது. மனிதநேயம் சற்றேனும் இல்லாத, உயிர்கள் மீது பச்சாதாபம் கொள்ளாத, ஈவிரக்கமற்ற கொடியவர்களால் மாத்திரமே இவ்வாறான மிருகத்தனமான செயல்களில் ஈடுபட முடியுமென்பது மட்டும் உண்மை.

இச்சம்பவங்களை இனமத பேதமின்றி அனைத்து மக்களும், இலங்கையர் என்ற பொது அடையாளத்தின் கீழ் ஒன்றாக நின்று வன்மையாகக் கண்டிக்க வேண்டியது அவசியம். அதேசமயம் குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமான கொடியவர்கள் எத்தகைய தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இனிமேலும் இடம்பெறாதவாறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டியதும் அவசியம்.

அதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது பரிதாபமாக உயிரிழந்து போனோருக்காக எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உறவினர்களையும் நண்பர்களையும் இழந்து துயருறுவோருடன் நாமும் இணைந்து கொள்கிறோம். பரிசுத்தம் நிறைந்த, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை இரத்தக்களரியாக மாற்றிய கொடூர சம்பவத்தின் துயரம் உள்ளத்தில் வலியைத் தருகின்றது.


Add new comment

Or log in with...