இது வரை 207 பேர் பலி; சுமார் 450 பேருக்கு காயம் | தினகரன்

இது வரை 207 பேர் பலி; சுமார் 450 பேருக்கு காயம்

இது வரை 207 பேர் பலி; சுமார் 450 பேருக்கு காயம்-Death Toll Rises 207 and 450 Injured

- 36 வெளிநாட்டவர்கள் பலி; தேசிய வைத்தியசாலையில் 11 சடலம்; 9 பேரை காணவில்லை
-> மீள அறிவிக்கும் வரை பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு
-> சமூக வலைத்தளங்கள் முடங்கின
-> சூழ்ச்சியை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
-> வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம்
-> அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை
-> கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இன்று (21) காலை முதல் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இது வரை 207 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 450 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதாகியுள்ளதோடு, இதில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள் என பாதுகாப்பு அமைச்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

மரணமடைந்தோரில் 25 பேர் வெளிநாட்டவர்கள் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தோரில் பதினொரு பேர் வெளிநாட்டவர்கள் எனவும், அவர்களில், 3 இந்தியர்கள், 3 பேர் ஐக்கிய இராச்சியம், 2 பேர் துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சிய குடியுரிமையை கொண்ட 2 பேர் உள்ளடங்குவதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 9 வெளிநாட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 - 9.00 மணியளவில், கொச்சிக்கடை தேவாலயம், கட்டான, கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சென்றல் வீதியிலுள்ள சீயோன் தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் காலி முகத்திடல் அருகிலுள்ள ஷங்ரி லா, கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் மற்றும் கொம்பனித்தெருவிலுள்ள சின்னமன் கிராண்ட் ஆகிய 3 ஹோடல்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, இன்று (21) பிற்பகல் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு முன்னாலுள்ள ‘ட்ரொபிகல் இன்’ எனும் ஹோட்டலிலும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இதேவேளை கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் (CCD) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர்கள் தெமட்டகொடையிலுள்ள மஹவில கார்டன் தொடர்மாடி கட்டடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு விசாரணைக்காக சென்ற வேளையில் அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், உப பரிசோதகர் ஒருவர் மற்றும் இரு கொன்ஸ்டபிள்கள் பலியானதோடு, மற்றுமொரு கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (21) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பிபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தெமட்டகொடையிலுள்ள வீட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு 3 ஆலயங்கள் மற்றம் கொழும்பிலுள்ள ஹோட்டல்கள், தெஹிவளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு உள்ளிட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இது வரை 207 பேர் மரணமடைந்துள்ளதோடு, சுமார் 450 பேருக்கு காயமடைந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஆகக் கூடுதலாக 104 பேர் மரணமடைந்துள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்ததோடு, சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையில் 66 பேர் பலியாகியுள்ளதோடு 260 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 28 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ராகமை வைத்தியசாலையில் 07 பேரின் சடலங்களும், 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், களுபோவில போதனா வைத்தியசாலையில் 02 பேர் மரணமடைந்துள்ளதோடு, சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் பலியான 02 பேர் தெஹிவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் பலியானோர் மற்றும் காயமடைந்தோர், எந்தெந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாக தெரிவித்த அவர், வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள், வெவ்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விடயங்களை, விசாரணைகளை அடுத்தே தெரிவிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...