டெங்கு தீவிரமடைய வழிவகுக்குமா? | தினகரன்

டெங்கு தீவிரமடைய வழிவகுக்குமா?

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சிக் காலநிலை ஆரம்பித்துள்ளது. இக்காலநிலையோடு சேர்த்து நுளம்புகள் பெருக்கமடைவதற்கான சாத்தியக்கூறுகளை பரவலாக அவதானிக்க முடிகின்றது. அதிலும் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் மழைக் காலநிலையுடன் சேர்த்து பலகிப் பெருகும் அச்சுறுத்தல் தென்படுகின்றது. இந்நாட்டில் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக மழைக்காலநிலையுடன் சேர்த்து டெங்கு நுளம்புகள் பல்கிப் பெருகுவது வழமையாகும்.  

அந்தவகையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இந்நுளம்புகள் பல்கிப் பெருக நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன. மழை நீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பை டெங்கு நோயைப் பரப்பும் ஈடிஸ் எஜிப்டைய் மற்றும் ஈடிஸ் அல்போபிக்கடஸ் என்ற இருவகை நுளம்புகளும் தான் கொண்டுள்ளன. இவ்விரு வகை நுளம்பங்களும் தெளிந்த நீர் தேங்கி இருக்கும் இடங்களிலேயே முட்டையிட்டு பெருகக் கூடியவை.  

இந்த டெங்கு வைரஸ் நோயானது ஆளுக்கு ஆள் பரவக் கூடியதல்ல. அது இவ்வின நுளம்புகளால் தான் காவிப் பரப்பப்படுகின்றன. அதாவது கைவிடப்பட்ட டயர்கள், செவ்விளநீர் குரும்பைகள், சிரட்டைகள். தயிர்ச்சட்டிகள், யோகட் கப்புகள், அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்ரிக் பாத்திரங்கள் போத்தல்கள், பொலித்தீன் மற்றும் சிலிசிலி உரைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களில் தேங்கும் தெளிந்த நீர் இந்நுளம்புகள் பெருகும் முக்கிய இடங்களாக உள்ளன.  

அதேநேரம் நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகள், தண்ணீர் பீப்பாய்கள் உள்ளிட்ட நீர் சேகரிக்கும் பாத்திரங்களிலும், வீட்டுக் கூரைப் பீலிகளிலும், கொங்கிறீட்களிலும் இலைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் சேருவதால் தேங்கும் நீரிலும், பூச்சாடிகள், வீடுகளில் அலங்கார மீன்கள் வளர்க்கப்படும் நீர்த்தாங்கிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் கீழ்ப்பகுதியின் பின்பகுதியில் சேரும் நீரிலும், உடைந்துள்ள மலசலக் கூடங்களில் சேரும் நீரிலும், மூங்கில் உள்ளிட்ட மழை நீர் தேங்கக் கூடிய இலைகளைக் கொண்ட மரங்கள் என்பவற்றிலும் இந்நுளம்புகள் பெருகும் பண்பைக் கொண்டுள்ளன.  

அதனால் எமது இல்லங்களிலும் சுற்றுச்சூழலிலும் மழை நீர் தேங்கக் கூடிய வகையில் காணப்படுகின்ற கழிவுப் பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவதிலும் ஏனைய இடங்களை வாரத்திற்கு ஒரு தடவை தெளிந்த நீர் தேங்க முடியாதபடி சுத்தப்படுத்தி உலர் நிலையில் வைத்திருப்பதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனைத் தம் பொறுப்பாகக் கருதிச் செயற்பட வேண்டும்.  

இல்லாவிட்டால் இவ்வின நுளம்புகள் தெளிந்த நீர் தேங்கி காணப்படும் இடங்களில் ஒரு தடவைக்கு 100 – 200என்றபடி முட்டையிட்டு பல்கிப்பெருகும். அத்தோடு இந்நுளம்பின் முட்டைகள் ஒட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் இம்முட்டைகள் 06 – 12மாதங்கள் வரையும் அழிவடையாது உயிருடன் காணப்படக் கூடியனவாகவும் உள்ளன. 

அதனால் ஒழுங்கு முறையான நடவடிக்கைகளின் மூலம் இவ்வின நளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இந்நோயைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இதுவே மிகச் சிறந்த வழிமுறை. என்றாலும் இவ்வழிமுறைகள் குறித்து அதிக அக்கரை செலுத்தப்படாத்தால் இந்நோயைப் பரப்பும் நளம்புகள் பல்கி பெருகி டெங்கு வைரஸைக் காவிப் பரப்பி மக்கள் மத்தியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன.  இவ்வின நுளம்புகள் குத்துவதன் ஊடாகவே சாதாரண தேகாராக்கியம் கொண்டவருக்கு டெங்கு வைரஸ் பரப்பப்படுகின்றது. இவ்வைரஸ் ஒருவரது உடலுக்குள் சென்று விட்டால் அதற்கான அறிகுறிகள் சில தினங்களுக்குள் வெளிப்படும். அதாவது கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி என்றபடி இந்நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் வெளிப்படும். இவ்வறிகுறிகள் மூன்று நான்கு நாட்களில் குணமடைந்துவிடும். ஆனால் அவ்வைரஸின் தொழில்பாடு உடலினுள் காணப்படும்.  

இச்சமயம் மீண்டும் டெங்கு வைரஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் டெங்கு நோயானது டெங்கு இரத்தப்போக்காக இருக்கும். அது உயிராபத்து மிக்கதாகவும் இருக்க முடியும். இச்சமயம் உடலின் சில இடங்களில் தோலின் கீழ் இரத்தத் புள்ளிகள் தென்படும், கண்கள் சிவப்பு நிறமடையும், மூக்கு, முரசு, மலம், சிறுநீர் என்பவற்றில் இரத்தம் வெளிப்படும், வாந்தி மற்றும் மலம் என்பன கறுப்பு நிறத்திலோ அல்லது கடும் கபில நிறத்திலோ வெளிப்படும்.  

இவ்வாறான அறிகுறிகள் நிலவிய போதிலும் காய்ச்சல் திடீரென குறைவடையும். அதனை வைத்து இந்நோய் குணமடைந்து விட்டதாகக் கருதி விடக் கூடாது.

அது டெங்கு அதிர்ச்சி ஏற்படுவதற்கான முன்னறிகுறியாக அமையலாம். இந்நிலை ஏற்படும் போது உடல் குளிர்வடையும், உடல் வெளிரும், தூக்கமின்மையும் பதற்றமும் காணப்படும். இதயத் துடிப்பும் மூச்செடுப்பதும் வேகமடையும் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். 

ஆகவே டெங்கு நோயை இரத்தப் பரிசோதனையின் ஊடாகத்தான் சரியாக இனங்காண முடியும்.

அதன் காரணத்தினால் எவருக்காவது இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையையோ, மருத்துவ நிபுணரையோ அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

அதேநேரம் இக்காய்ச்சல் குறைவடைகின்றது எனக் கருதி அஸ்பிரினோ அஸ்பிரின் அடங்கிய மாத்திரைகளையோ வழங்கக் கூடாது. இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிகம் ஓய்வு எடுக்க வேண்டும். சிறுகுழந்தைகளாயின் பாடசாலைக்கு செல்லக் கூடாது. இப்படியானவர்கள் நுளம்பு வலையில் ஒய்வு எடுக்கத் தவறக் கூடாது. இவர்களுக்கு அதிகம் நீராகாரத்தை வழங்க வேண்டும். சிகிச்சையின் பின்னர் இந்நோய்க்கான அறிகுறிகள் குணமடைந்தாலும் சிறிது காலம் முன்னவதானத்துடன் இருக்க வேண்டும்.  

ஆனால் இவ்வருடம் (2019) முதல் நான்கு மாத காலப்பகுதியிலும் 13ஆயிரத்து 975பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 40.6வீதத்தினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பரவுதல் தடுப்பு பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களில் 3126பேர் கொழும்பு மாட்டத்திலும். 1748பேர் கம்பஹா மாவட்டத்திலும், 803பேர் களுத்துறை மாவட்டத்திலும் 1705பேர் யாழ்ப்பாண மாவட்டத்திலும், 832பேர் கண்டி மாவட்டதிலும் என்ற படி அதிகளவில் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.  

ஆகவே ஒழுங்கு முறையானதும், சீரானதுமான நடவடிக்கைகள் மூலம் டெங்கு நோயைத் தவிர்த்துக் கொள்ளவும், முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதனால் முன்னெச்சரிக்கைக்கும் முன்னவதானத்திற்கும் முதலிடமும் முன்னுரிமையும் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.


Add new comment

Or log in with...