அலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி | தினகரன்

அலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி

இன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை பரவலாகவும் அடிக்கடியும் செவியேற்க முடிகின்றது. ஆனால் இதனை சாதாரண தலைவலி என்று கருதுபவர்களும் உள்ளனர். இவ்வகைத் தலைவலி தொடர்பில் அதிக கவனம் செலுத்தாதவர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமுள்ளனர்.   

என்றாலும் ஒற்றைத் தலைவலியை வெறும் தலைவலி என்று மாத்திரம் நோக்கக் கூடாது. அது மிதமான தன்மையிலிருந்து கடுமையான தன்மையில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். தலையில் ஒரு பக்கத்தில் மாத்திரம் துடிக்கும்படியான வலியை உருவாக்கும்.  

இவ்வகைத் தலைவலிக்கு உள்ளானவர்கள் மத்தியில் குமட்டல், வாந்தி, ஒளி அல்லது ஒலியை உணர்வதில் சிக்கல், அவ்வப்போது பார்வைக் குறைபாடுகள் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் மரபு, சூழல் ஆகிய இரண்டு அம்சங்களும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளாகவிளங்குகின்றன.  

பொதுவாக உலகில் ஐந்தில் ஒரு பெண்ணும், பதினைந்தில் ஓர் ஆணும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய்ச் சுழற்சியின் போது ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகவே ஒற்றைத் தலைவலிக்கு பெண்கள் அதிக அளவில் உள்ளாகின்றார்கள் என நம்பப்படுகின்றது. அதேநேரம் பாலாடைக் கட்டி, கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்கள், சொக்லேட், மதுபானம் போன்றவற்றை உட்கொண்ட பின்னர் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாக இத்தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஒற்றைத் தலைவலியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில குறிப்பிட்ட தன்மைகளுடன் வெளிப்படும். இன்னும் சில எந்தத் தன்மையும் இல்லாமல் உருவாகும். திடீர் வெளிச்சத்தை உருவாக்கும் காட்சிகள், பார்வையில் குறைபாடு போன்றவை குறிப்பிட்ட தன்மைகளுடன் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளாக விளங்குகின்றன.  

சிலவேளை இந்தக் குறிப்பிட்ட தன்மைகளின் அறிகுறிகள் வெளிப்பட்டதும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஆனால் இத்தலைவலியின் தாக்கம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சிலருக்கு இத்தலைவலியின் தாக்கம் ஒரு வாரத்தில் பல தடவைகள் வெளிப்படும். இன்னும் சிலருக்கு வாரம், மாதம், வருட இடைவெளியிலும் கூட ஏற்பட முடியும்.  

என்றாலும் இத்தலைவலியை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை இற்றை வரையும் புழக்கத்திற்கு வரவில்லை. வலி நிவாரணிகள் தான் ஓரளவுக்கு இத்தலைவலியைக் கட்டுப்படுத்திக் கொள்ளவென உதவக்கூடியனவாக உள்ளது. அதனால் ஒற்றைத்தலைவலி ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் வெளிப்பட்டதும் மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ள வலி நிவாரணி மாத்திரைகளை பாவிப்பது தான் நல்லது.

இருப்பினும் சில மாத்திரைகளை அதிகம் பாவித்தாலும் மீண்டும் தலைவலி வருவதற்கான சாத்தியம் இருப்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள், தேவையான மருத்துவ ஆலோசனைகள் போன்றவற்றால் இத்தலைவலியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அபிப்பிராயமும் உள்ளது.  

ஆனால் இத்தலைவலி ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. என்றாலும் மூளையின் குருதி நாளங்களைப் பாதிக்கும் அசாதாரண மூளைச் செயல்பாடாக இது வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் குருதியில் குளுக்கோஸின் அளவில் குறைவு, மாதவிடாய் தொடர்பான ஹோர்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், உளச் சோர்வு போன்றவாறான பிரச்சினைகளும் இத்தலைவலி ஏற்பட வழிவகுக்கின்றன.

சிலருக்குத் தூக்க மாத்திரைகளைப் பாவிப்பதன் விளைவாகவும், இன்னும் சிலருக்குத் தூக்கமின்மையாலும், ஒழுங்கற்ற உணவு முறையாலும் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றது.  

ஆகவே இத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாட்குறிப்பைக் கையாள்வது சிறந்தது. ஏனெனில் எந்த விஷயத்தைச் செய்த பிறகு, இத்தலைவலி ஏற்படுகின்றது என்பதை இதன் மூலம் சரியாக அறிந்து கொள்ளலாம்.

அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையிலும், நடத்தைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

அதன் ஊடாக இத்தலைவலி ஏற்படுவதை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

அதனால் தான் இத்தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்ப்பதானது ஒற்றைத் தலைவலியைக் கையாள்வதற்கான சிறந்த வழிமுறையாக விளங்குகின்றது. இத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களது அபிப்பிராயமும் இவ்வாறே உள்ளது.  

அதேநேரம் இத்தலைவலியால் அவதிப்படும் போது இருண்ட, அமைதியானதும் அறையில் ஓய்வெடுப்பது நல்லது.சில நேரம், கழுத்தின் பின்புறத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைக் குறைப்பதற்கு உதவும். சிலருக்குக் குளிர்ந்த நீரில் குளிப்பது கூட நிவாரணமாக இருக்கும்.  

என்றாலும் இவை எல்லாவற்றையும்விட, உடனடி மருத்துவ ஆலோசனை எப்போது தேவைப்படும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியமானது.

ஏனெனில் உடலின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பலவீனத்தை உணர்வதும், குழப்பமான பேச்சும் பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். திடீரென ஏற்படும் தலைவலி, மூளையில் ஏற்படும் இரத்தக்கசிவின் வெளிப்பாடாக இருக்கலாம். தலைவலியுடன் கழுத்துப் பிடிப்பு, தடிப்புகள் ஏற்பட மூளை அழற்சி காரணமாக அமையலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் தலைவலியை வழக்கமான தலைவலி தான் எனக் கருதி அலட்சியப் போக்கில் நடந்துகொள்ளக்கூடாது.

அது உயிராபத்தாகக்கூட அமைந்து விடலாம். அதனால் தலைவலியில் வித்தியாசங்கள் வெளிப்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதுவே ஆரோக்கிய ரீதியான பாதுகாப்பாக அமையும். 

(முஹம்மத் மர்லின்)


Add new comment

Or log in with...