திறைசேரியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பொது நிதியங்கள் | தினகரன்

திறைசேரியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பொது நிதியங்கள்

பொது நிதியங்கள் அனைத்தும் திறைசேரியின் நேரடி மற்றும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதற்கான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந் நிதியங்கள் அரசின் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக சட்டரீதியாகவும் சட்டப்பூர்வமற்ற வகையிலும் வெவ்வேறு இலக்குகளை வெற்றிக்கொள்வதற்கு செயல்படுத்தப்படுகிறது.

அதன் பிரகாரம் அனைத்து பொது நிதியங்களும் வினைத்திறன்மிக்க வெளிப்படைத்தன்மையுடனான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்படுமென நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்படும் நிதியங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு உட்பட்ட பொதுவான நிதியமாக மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் அரசாங்க நிதிக்கொள்கை தரமானதாக மாறும் என்பதுடன் அதன் வினைத்திறன் தன்மை பாரிய அளவில் அதிகரிக்கும் என்பதால் இது மிகவும் நன்மையை தரக்கூடிய செயற்பாடாக அமையும்.

அரச பொது நிதியங்களை திறைசேரியின் நேரடி மற்றும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சிபாரிசுகளை முன்மொழிவதற்கான குழு 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் தற்போது வரை 12 அரச நிதியங்கள் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அரச நிதியங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது தொடர்பில் அவற்றை செயற்படுத்திவரும் அமைச்சுகளுடன் திறைசேரி அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...