குடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள் | தினகரன்

குடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்

இப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள் காணப்பட்டாலும் அக்கிணறுகளில் நீர் இல்லை

நாட்டில் நிலவும் கடும் வரட்சி நிலைமையால் பொல்கஹதெனிய கிராம மக்கள் பெரும் குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர். இக்கிராமம் கம்பஹா மாவட்டத்தில் பசியால பிரதேசத்தின் நாம்புளுவ கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியாகும். இப்பிரதேசம் ஒரு மலைப்பாங்கான இடமாகும்.

இக்கிராமத்தில் சாதாரண காலங்களில் கூட குடிநீர்ப்பிரச்சினை இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் தற்போதைய வரட்சி இந்த மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகின்றது. அன்றாடம் குடிநீருக்கு இவர்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் சில வீடுகளில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள் காணப்பட்டாலும் அக்கிணறுகளில் நீர் இல்லை. கிணறுகள் வற்றி வெறும் தரையே தெரிகின்றது. இதனால் மக்கள் மலையில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு கீழ் இறங்கியே நீரைப் பெற்றுச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் நோய்வாய்ப்பட்டவர்கள் நீரின்றி பாரிய இடர்களை எதிர்கொள்கின்றனர்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று குழாய்க் கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தற்போது அக்கிணறு சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கிராம மக்களின் அன்றாட தேவையான குடிநீர் பிரச்சினைக்கான உரிய தீர்வை பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடமும் அமைச்சிடமும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Add new comment

Or log in with...