புனிதமான சிலுவை | தினகரன்

புனிதமான சிலுவை

நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து வந்துள்ளோம். அவற்றில் பெரிய வெள்ளிக்கிழமை மட்டும் உலகளவில் பேசப்படும் மதிக்கப்படும் நாளாக அமைந்துவிட்டது. இந்த நாள் உலக வரலாற்றை மாற்றியமைத்த நாள்.

எந்த பாவமுமறியாத கிறிஸ்து இயேசு உலகின் ஒட்டு மொத்த பாவங்களை தன்னில் ஏற்று பாவப்பலியாக தன்னைத்தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்த நாள். இதனை புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில்:

"கடவுள் வடிவில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிக உயர்த்தி எப் பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மன்னவர் அனைவரும் மண்டியிடுவர்.

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்" (பிலிப்பியர் 2:8,10)என தெரிவிக்கின்றார்.

அவரோடு சேர்ந்து இருவேறு சிலுவையில் அறையப்பட்ட இருபாவிகளில் ஒருவனுக்கு அவரது பரிசுத்த நிலை புரிந்தது. அவன் அவரைப் பார்த்து தன்னைத் தாழ்த்தி இவ்விதமாய் வேண்டினான். "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம் நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்றார்.

கிறிஸ்து இயேசுவை சிலுவையில் அறையும்வரை சிலுவை ஒரு அவமானச் சின்னமாயிருந்தது.

ஆனால் உத்தமர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதால் அந்த அவப்பெயர் மாறியது.

அன்று முதல் அவமானச்சின்னம், புனித சின்னமாகியது.

சிலுவையில் மரித்த இயேசு முன்னறிவித்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? (கொரிந்தியர் 15:55)


Add new comment

Or log in with...