அன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்! | தினகரன்

அன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்!

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய வெள்ளி திருநாளை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசுவின் வாழ்க்கை தியாகத்தையும் மன்னிப்பையும் அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தன் வாழ்நாள் முழுவதும் அவர் அதனை வாழ்ந்து காட்டினார். எம்மையும் அவ்வாறு வாழ அழைப்பு விடுக்கின்றார்.

தவக்காலத்தில் 40 நாட்கள் நோன்பிருந்து நம்மை நாமே சுத்திகரித்து பரிசுத்த வாரத்தில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை மிக ஆழமாக தியானித்து அது தொடர்பான வழிபாடுகள், சடங்குகள், யாத்திரைகளில் ஈடுபட்டு எம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி உள்ளோம்.

பரிசுத்த வாரத்தில் வரும் பெரிய வியாழக்கிழமையன்று இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

அது போல அன்றைய தினத்தில் நாமும் ஒருவர் ஒருவரின் பாதங்களைக் கழுவுகின்றோம்.இது உலகில் எந்த மனிதருக்கும் இடையில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதைக் காட்டுகிறது.

இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவும் போது ஒருவன் தலைவனாக இருக்க வேண்டுமானால் அவன் சீடனாக இருக்க வேண்டும் என தாழ்மையில் அர்த்தத்தை சொல்லிக் கொடுக்கின்றார்.

நாம் எத்தகைய உயர்நிலையில் உயர்பதவிகளில் இருக்கலாம், எனினும்

எத்தகைய மனிதருக்கும் நாம் உயர்ந்தவரல்லர். கடவுள் முன்னிலையில் நாம் அனைவரும் அவரது பிள்ளைகளே என்பதையே இயேசு நமக்குக் கற்பிக்கின்றார்.

கிறிஸ்துவின் பாடுகளின் பெரிய வெள்ளிக்கிழமையில் என்ன நடந்தது என்பதை பரிசுத்த வேதாகமம் இவ்வாறு தெரிவிக்கின்றது.

ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது."தந்தையே உன் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

இதைக் கண்ட நூற்றுவத் தலைவர் “இவர் உண்மையாகவே நேர்மையாளர் “என்று புகழ்ந்தார் எனக் கூறப்படுகின்றது.

தவக்காலத்தின் இறுதி நாளான இன்றைய தினம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உடலோடு நம் பாவங்களையும் அடக்கம் செய்வோம். நன்மைகளை செய்ய விடாது தீமைகளுக்கு காரணமாக இருந்த அத்தனை சிந்தனைகளையும் அடக்கம் செய்வோம். நம் நண்பர்கள் நம் உறவினர்கள் அல்லது நம் சகோதரர்கள் எவருக்காவது எம்மால் இதுவரை மன்னிப்புக் கொடுக்காமல், கொடுக்க முடியாமல் இருந்தால் அத்தகைய மனநிலையை நாம் அடக்கம் செய்வோம். தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் அடக்கம் செய்து மூன்றாம் நாள் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்போடு நாமும் புதிதாய் உயிர்ப்போம், நம் வாழ்வு புதிதாய் துளிர்விடட்டும்.

தன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இயேசு அநீதியை தட்டிக் கேட்க தயங்கவில்லை. நான் பேசியது தவறு என்றால் தவறை சுட்டிக் காட்டுங்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டாலும் தந்தையின் விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் தன்னை கையளிக்கிறார்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் சோதனைகள், துன்பங்கள் கண்டிப்பாக வரும். குறிப்பாக சமுதாய நலன்களுக்காக பாடுபடும் உள்ளங்களுக்கு துன்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே வரும். துன்பங்களை கண்டு விலகிவிடக் கூடாது. மாறாக இயேசுவைப் போல் வெற்றி பெறும் வரை, இறுதிவரை போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காக இயேசுவைப் போல் நாமும் தாழ்ந்து போக வேண்டும்.

நம் எதிரிகளை மன்னிக்க வேண்டும். குறிப்பாக நாம் இறக்கும் போது நமக்கென எதிரிகள் யாரும் இருக்கக் கூடாது. இயேசு இறக்கும் தறுவாயில் கூட "தந்தையே, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்" என்று தன் பகைவர்களை மன்னிக்கிறார்.

இயேசுவைப் போல், தியாக வாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். நமது வாழ்க்கையில் தியாகம் என்பது உடனே வந்து விடாது. தனிமனித உதவியிலிருந்து சமுதாய உதவிக்கும் பிறகு ஒட்டுமொத்த நாட்டின் உதவிக்கும் நமது வாழ்வை மாற்றும் போதுதான் தியாக வாழ்வு நம்மில் பிறப்பெடுக்கும்.

மற்றவருக்கு துன்பம் வராமல் பாதுகாக்க முடிவெடுத்தால் கண்டிப்பாக நாம் தியாகம் செய்தாக வேண்டும். துன்பங்களை சந்திக்க வேண்டும். சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். இதைத்தான் நமக்காக துன்பப்பட்டு இயேசுவும் தன் வாழ்க்கையில் செய்தார்.

பற்பல உதவிகளைப் புதுமைகளைச் செய்தார். நோய்களைக் குணமாக்கினார், ஏழைகளுக்கு இரங்கினார். பசித்தோருக்கு உணவளித்தார். இறுதியாக நமது பாவங்களுக்காக நம்மை மீட்க சிலுவைச்சாவை ஏற்கிறார். இதற்காக அவர் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், சோதனைகள் அநேகம். அவரது வாழ்க்கையில் உண்மையிருந்தது, அன்பிருந்தது, அவரது செயல்களில் நீதி இருந்தது, சமாதானம் இருந்தது, அவரிலே தியாகம் இருந்தது. அதனால்தான் இயேசுவில் இறைவனும் இறைவனில் இயேசுவும் வாழ்ந்தார்கள்.

நமது வாழ்க்கையில் எங்கே உண்மையில்லையோ, அன்பில்லையோ, தியாகமில்லையோ, நீதி இல்லையோ, சமாதானம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டார்.

நாம் கடவுளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது அனுதினம் சாகடித்துக் கொண்டிருக்கிறோமா? இந்த பரிசுத்த வாரத்தில் நம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி இது.

"சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்" என்று அனைவரையும் அன்பு செய்தவருக்கு, புதுமைகள் பல செய்தவருக்கு அநீதியை, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடியவர்க்கு கிடைத்த மாபெரும் பரிசு அவமானத்தின் சின்னம் சிலுவை.

ஆனால் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் அதையும் ஏற்றுக் கொண்டார். தன்னுயிரையே தியாகம் செய்தார். அன்பின் பிறருக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் உச்சக் கட்டம். அதை விட மேலான அன்பு வேறு இல்லை என்பதை இயேசு நிருபித்து விட்டார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. எனவே இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்தித்தவர்களாக இந்த பெரிய வெள்ளியில் வழிபாடுகளில் பக்தியோடு பங்கு கொள்வோம்.

நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி இருப்பதை வெறுமையான பீடமும், எரியாத மெழுகுவர்த்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன.

முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக ஆளாகினோம். ஆண்டவராகிய கிறிஸ்துவின் பாடுகளினால் பழைய ஆதாமின் சாயலைத் தாங்கியிருக்கும் நாம் உமது அருளால் புனிதமடைந்து புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி அனைத்திலும் அவரைப் போல் ஆகிட இறையருள் வேண்டுவோம்.

  


Add new comment

Or log in with...