ஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில் | தினகரன்

ஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்

ஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருப்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக நாட்டில் இயல்பு நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை, அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதனால் அரசாங்கம் அதன் பணிகளை செவ்வனே முன்னெடுப்பதில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெரும் சவாலுக்கு அரசு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பணியை அரசாங்கத்தினால் சீராக முன்னெடுக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இந்த வருடத்தில் நாடு முக்கியமான இரண்டு தேர்தல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இரண்டு மாகாண சபைகளைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. மேல்மாகாண சபையின் பதவிக் காலமும் இரண்டு தினங்களில் முடிவுக்கு வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடன் நடத்த வேண்டிய நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டச்சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்தச் சட்டச்சிக்கலை நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆணகைகுழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். எல்லை நிர்ணய மீளாய்வுக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மீளாய்வுக்குழுத் தலைவரான பிரதமரிடம் அவர் கேட்டிருக்கின்றார்.

இது விடயத்தில் இன்னமும் சாதகமான தன்மை வெளிப்படாமை காரணமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலில் இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலொன்றுக்குச் செல்லும் ஒரு நிலைமையே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இருந்தபோதும் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்தும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா? ஆறு வருடங்களா? என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் ஐந்து வருடங்கள்தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக் காலம் எப்போது நிறைவு பெறுகிறது என்ற மற்றொரு பிரச்சினையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலளார் எழுப்பி உச்ச நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். எனினும் சுதந்திரக் கட்சியின் மற்றொரு தரப்பு ஜனாதிபதி அவ்வாறான முடிவை எடுக்கவில்லையெனவும் கட்சியின் செயலாளரின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்திருக்கின்றது.

சுதந்திரக் கட்சி செயலாளரின் கூற்றை பொதுஜன பெரமுனவும் கடுமையாக சாடியுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியாகவே அக்கட்சி இதனைக் கருதுகின்றது. இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சி என அக்கட்சி சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் தேவைகளுக்காக மக்களின் ஜனநாயக உரிமைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பதையே இவை காட்டுகின்றன. இது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். இந்த தேர்தல் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு மௌனப் போக்கை கடைப்பிடித்தாலும் உள்ளூர அது ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்ளும் மறைமுக வெளிப்பாட்டைக் காட்டிக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலுக்கான முயற்சியே இன்று முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அவதானிக்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இது விடயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில் சுதந்திரக் கட்சி தடுமாறிக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. பிரதான கட்சிகளுக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆர்வம் இருப்பதாகக் காணமுடியவில்லை.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் கிடையாது. அரசியல் கட்சிகள் அவற்றின் சுயநல அரசியல் நிலைப்பாடுகளுக்காக முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்வதை எவராலும் அங்கீகரிக்க முடியாது. மக்களின் இறைமையுடன் விளையாட இடமளிக்க முடியாது. மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குப் பலத்தை விலைபேசும் துரோகத்தனத்தையே அரசியல் கட்சிகள் முன்னடுத்து வருகின்றன. இது ஜனநாயக மரபை மீறும் ஒரு செயற்பாடாகவே பார்க்க முடிகிறது.

மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஜனாதிபதி தேர்தலும் முக்கியமானவையாகும். அவை உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மக்களின் உரிமையை மதிக்க வேண்டும். அதிகாரத்தை எட்ட வேண்டும் என்பதற்காக ஜனநாயக நெறிமுறையை சின்னாபின்னப்படுத்த முனையக்கூடாது. ஜனநாயக பண்புகளை பேணவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு கட்சி மீதும் உள்ளதை மறந்துவிடக்கூடாது. ஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு மக்கள் தள்ளிவிடப்படக்கூடாது.

எந்தத் தேர்தலும் தள்ளிப் போகக்கூடாது. அவை உரிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கப்பால் சட்டம் சீராக இயங்க வேண்டும். இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு மகத்தான கடப்பாடு உள்ளது. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஆணைக்குழு காய்நகர்த்திக்கொண்டிருக்க முடியாது. அவசியமானால் ஆணைக்குழு தாமதமின்றி உச்ச நீதிமன்றினை நாடியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழம்பிப்போயுள்ள ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட வேண்டும். ஜனநாயக செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்திருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாட்டை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை சரியான திசையில் ஓடச் செய்வதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. ஜனநாயகப் போர்வைக்குள் சர்வாதிகாரம் நுழைய இடமளிக்கப்படக்கூடாது.


Add new comment

Or log in with...