Friday, March 29, 2024
Home » 71 எம்.பிக்களுடன் ‘புதிய கூட்டணி’ ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

71 எம்.பிக்களுடன் ‘புதிய கூட்டணி’ ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

by mahesh
January 3, 2024 8:15 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் நோக்குடன், 71 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளோம். இக்கூட்டணி ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடன் இணையாதென பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்து, அக்கூட்டணிக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர், இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டில் நிச்சயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அது ஜனாதிபதித் தேர்தலாகவே இருக்குமென நம்புகிறேன். தேவையேற்படின் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைக் கூட நடத்தலாம். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பே முதலில் வெளியாகும் என்பது எனது நிலைப்பாடாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு, தற்போது அக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தாத 71 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கூட்டணியில் உள்ளனர்.

71 பேரை உள்ளிடக்கியே புதிய கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியை எம்மால் நிறுவ முடியும்.

இன்றிலிருந்து எமது புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் போது பரந்த அணியாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது அணி செயற்படும்.

நாங்கள் வேலை செய்த எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றோம். நாம், வேண்டாமெனக் கூறிய சில விடயங்களைச் செய்ததால் சில தலைவர்கள் தோல்வியடைய வேண்டியேற்பட்டது. நாம் கூறியவற்றை செய்தவர்கள் படிப்படியாக முன்னேறினர்.

உண்மைக்கும் பொய்க்கும் இடையில் தேர்தல் வரவுள்ளது. எந்தவொரு கட்சிக்கும் வாக்குறுதிகளை வழங்க முடியும். ஆனால் அவை அனைத்தையும் நிறைவேற்ற முடியாது.

பணத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது. இன்றிலிருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

மக்கள் தூற்றுவார்கள் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கத்தினரும் நன்கு அறிவர். மக்கள் எவ்வளவு விமர்சித்தாலும் உண்மைகளையும், யதார்த்தத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

கோட்டாபாய ராஜபக்ச வரிகளை குறைத்த பின்னர் என்ன நடந்தது? அது அனைவருக்கும் நன்றாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை. எமது பயணம் பொருளாதார திட்டத்துடன் கூடியதாகும். ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்களும் சிறப்பாகக் காணப்படுவதால் நாம் அவரை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாயின் மக்களுக்கு சார்பான முடிவுகளை எடுப்பது கடினமாகும்.

இது கடினம் என்றாலும், இந்த உண்மையை நாம் எற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்றிலிருந்து மக்களுக்கு உண்மைகளைக் கூறுவோம். இந்தக் கூட்டணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிற்காது. நாலக கொடஹேவா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வலது கரம் போன்றவர்.

அந்த சந்தர்ப்பத்தில் வரியைக் குறைக்க வேண்டாம் என்று வழங்கிய ஆலோசனைகளை அவர் கேட்கவில்லை. தற்போது அவருக்கு என்னவானது? அரசியல்சார்பற்ற ஒருவரை ஜனாதிபதியாக்குவதாக கூறி நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளனர். பொதுஜன பெரமுனவினாலோ, ஐக்கிய மக்கள் சக்தியாலோ ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கூட்டங்களை நடத்த முடியாது.

தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஜே.வி.பிக்கும் நாம் சவாலான கூட்டணியாக இருப்போம். மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து 22 மாவட்டங்களிலும் வெற்றி பெறக் கூடிய பலம் மிக்க கூட்டணியாக நாம் வலுப்பெறுவோம் என்றார்.

நிமல் லன்சா MP தெரிவிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT