மஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் | தினகரன்

மஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்

மஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இஞ்ஞானியர் தேவாலயத்தில் வழிபாடு ஆராதனையின் பின்னர் இன்று (18) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சோகத்தில் உறைந்துள்ள பொதுமக்கள், இளைஞர்கள், உறவுகள், கிராமத்தவர்கள், மாணவர்கள் கண்ணீர் சிந்தி, கதறியழுது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியும், இறுதிக்கிரியையிலும் கலந்துகொண்டனர்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர், நேற்று (17) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து இன்று (18) அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.

10பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் சடலங்கள் பிற்பகல் கள்ளியங்காடு சேமக்காலை மற்றும் மாமாங்கம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)


Add new comment

Or log in with...