இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது | தினகரன்


இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது

அரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும் முன்னேற்றமடையச் செய்ய முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நலன்புரி அமைப்பு திட்டத்தினால் நிறைவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  அமெரிக்க உயா்ஸ்தானிகா் அலெய்னா பி, டெப்லிற்ஸ் ஆகியோர் வைபவரீதியாக இன்று (18) திறந்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் ஏ.எல்.எம்.நஸீா், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்பள்ளிகள் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளா் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனா்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அடிப்டை பிரச்சினைகளையும், இன முரண்பாடுகளையும் முடியுமானவரை களைந்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தமான அபிவிருத்தியையும், இன நல்லுறவையும் கடடியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கையுடனேயே கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியை நான் பொறுப்பேற்றேன்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் காணிப்பிரச்னைகள் அதிகம் உள்ளன. அஸ்ரப்நகர், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டப் பிரச்சினைகள், வட்டமடு பிரச்சினை, பொத்துவிலில் காணிப்பிரச்சினை என நிறைய தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதிமேகுதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள அதியுயர்பீட குழுவுடன் இணைந்து எமது முன்னோர்கள் மற்றும் பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து வந்த, விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையை படிப்படியாக முன்னெடுத்து வருகின்றோம்.

இக்காணிப்பிரச்சினைக்ளுக்கு வனபரிபாலன திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம், புராதன திணைக்களம் என்பன முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன் மக்களுக்கு பல்வேறு பட்ட அசௌகரியங்களையும் கொடுத்து வருவதாக அறிகின்றேன். இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.

இவற்றை எல்லாவற்றையும் விட எங்களிடமுள்ள பாரிய பிரச்சினை அரசியல் பிரச்சினைதான். அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இது ஒரு சமூக நோயாக வியாபித்து வருவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் செய்பவர்கள் தேர்தல் ஒன்று வரும் போது அதனை சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் தேர்தல் முடிவடைந்தவுடன் அவைகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அவ்வாறு இனமுரண்பாடுகளிலிருந்தும் நாம் விடுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பல்லினங்கள் வாழ்ந்து வரும் எமது நாட்டில் ஒரு இனத்தை வெறுத்து மற்றுமொரு இனம் நிம்மதியாக வாழ முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை,புரிந்துணர்வுடன் வாழும் போது அன்புடன் வாழ முடியும்.

அனைத்து வளங்களையும் வைத்துக் கொண்டு சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள கிழக்கு மாகாணத்தை அரசியல், இன ரீதியான முரண்பாடுகளைக் களைந்து முன்னேற்றமடையச் செய்வதற்கு ஒற்றுமையுடன் அனைவரும் செயற்பட வேண்டும். 

(அம்பாறை சுழற்சி நிருபர் - ரி.கே. ரஹ்மதுல்லா) 


Add new comment

Or log in with...