Thursday, April 25, 2024
Home » எந்த அரசின் ஆயுட்காலமும் இரண்டு வாரங்களாகி விடும்
IMF இன் திட்டத்தை செயற்படுத்தாவிடில்

எந்த அரசின் ஆயுட்காலமும் இரண்டு வாரங்களாகி விடும்

by mahesh
January 3, 2024 6:50 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்கு நர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தடம் புரண்டி ருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும். தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். 2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

2027 ஆம் ஆண்டு வரை நாட்டை எந்த ஜனாதிபதி ஆண்டாலும், யார் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றாலும் சர்வதேச சந்தைக்கு சென்று கடனைப் பெற்றுக் கொள்ள முடியாது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியின்றி கடன் வழங்குநர்களின் இணக்கப்பாடின்றி நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுக்க முடியாது.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT