Friday, March 29, 2024
Home » கல்முனை கல்வி வலயத்திற்கான கீதம் முப்பது ஆண்டுகளின் பின்னர் அறிமுகம்

கல்முனை கல்வி வலயத்திற்கான கீதம் முப்பது ஆண்டுகளின் பின்னர் அறிமுகம்

புத்தாண்டு தினத்தன்று வெளியீடு

by mahesh
January 3, 2024 9:00 am 0 comment

கல்முனை கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வலயத்தில் பன்னிரண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பணியாற்றியுள்ள நிலையில், தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமின் எண்ணக்கருச் சிந்தனையாக்கத்தில் வலயத்திற்கான கீதம் உருவாக்கப்பட்டுள்ளது

கல்முனை கல்வி வலயமானது கல்முனை, கல்முனை தமிழ், சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய ஐந்து வலயங்களைக் கொண்டது. தமிழ்,முஸ்லிம் எனப் பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய 65 பாடசாலைகள் இதன் கீழ் உள்ளன. இப்பிரதேசங்களின் தொழில், பண்பாடு, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வலயக் கீதமானது இயற்றப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

புதிய கல்வியாண்டுக்கான சத்தியப்பிரமாணமும், நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கான மௌனப் பிரார்த்தனையும் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி வலயக் கீதம் இசைக்கப்பட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கணக்காளர் வை.ஹபீபுல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், எம்எச்.றியாஸா, ஜிஹானா ஆலிப், திருமதி வருண்யா அடங்கலாக வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் தேசியக் கொடியினையும், கணக்காளர் வை. ஹபீபுல்லா மாகாணக் கொடியினையும், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் வலயக் கொடியினையும் ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தனர்.

நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் முகம்மட் சாஜித் புதிய ஆண்டுக்கான சத்தியப் பிரமாணத்தை ஒப்புவித்தார்.

கல்முனை வலய தமிழ்மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பில் வளவாளராக இருந்து ஓய்வு பெற்ற க.குணசேகரம் கீதத்தை இயற்றியதுடன், காரைதீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இ.கோபாலசிங்கத்தின் இசையில் வலயக் கல்வி அலுவலக இசைத்துறைக்கான வளவாளர் திருமதி எஸ்.கமலநாதன் பாடலைப் பாடியுள்ளார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, தமிழ் மொழிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால், வளவாளர் எம்.எம்.ஜெஸ்மி ஆகியேரின் ஒருங்கிணைப்பில் வலயத்திற்கான கீதம் வெளியாகியுள்ளது.

வலயக்கல்வி அலுவலகத்திற்கான கீதம் பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வளவாளர்கள், கல்விசார ஊழியர்கள் முன்னிலையில் உத்தியோகபூரவமாக புத்தாண்டு தினத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

“இனமத மொழி பேதமற்று கல்வி மணம் கமழவே முழு மனதாய் உழைத்திடும் எங்கள் கல்வி வலயம் வாழ்கவே” என்னும் வரிகளையும் தாங்கி இக்கீதம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT