மஹியங்கணையில் பாரிய விபத்து; 10 பேர் உயிரிழப்பு | தினகரன்

மஹியங்கணையில் பாரிய விபத்து; 10 பேர் உயிரிழப்பு

மஹியங்கணையில் பாரிய விபத்து; 10 பேர் உயிரிழப்பு-Mahiyanganaya Accident-10 People from Same Family Killed-Batticaloa
(படங்கள்: புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்- எம்.எஸ். நூர்தீன்)

மஹியங்கணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்களும் 3 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதுடன், வேனின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது வேனில் 12 பேர் பயணித்துள்ளதோடு, அவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை மஹியங்கணை பிரதான வீதியில், மஹியங்கணை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மஹியங்கணையில் பாரிய விபத்து; 10 பேர் உயிரிழப்பு-Mahiyanganaya Accident-10 People from Same Family Killed-Batticaloa

திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றுடன் எதிர்த் திசையில் பதுளையிலிருந்து மஹியங்கணை நோக்கி வந்த வேனொன்று ​நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மேலும் இரு பெண்கள் மஹியங்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்தைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதியை மஹியங்கணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹியங்கணையில் பாரிய விபத்து; 10 பேர் உயிரிழப்பு-Mahiyanganaya Accident-10 People from Same Family Killed-Batticaloa

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் விபரம்:
மட்டக்களப்பு பனிச்சையடியைச் சேர்ந்த, ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (50), மட்டக்களப்பு, டச்பார் பிரதேசத்தைச் சேர்ந்த லிஸ்டர் அலெக்சாண்டர் (32), அவரது மனைவியான நிசாலின் அலெக்சாண்டர் (27), அவர்களது இரட்டை பெண் குழந்தைகளான ஹனாலி அலெக்சாண்டர் (04), பைகா அலெக்சாண்டர் (04), மட்டக்களப்பு ரத்னம் வீதியைச் சேர்ந்த யூட் பிரின்ஸ் ஹென்ட்ரிக் (48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ட்ரிக் (42), அவர்களது மகளான செரெபி ஹென்ட்ரிக் (10), அவர்களது மகனான ஹெய்ட் ஹென்ட்ரிக் (19) ஆகியோர் இவ்விபத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், பிரின்ஸ் ஹென்ட்ரிக்கின் மகளான செகானி ஹென்ட்ரிக் (13) மற்றும் ரெசான் பர்கசால் (16) எனும் இரு பெண் பிள்ளைகள் படுகாயமடைந்து மஹியங்கணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Add new comment

Or log in with...