Home » அம்பாறை பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட மாணவி பாத்திமா அஸ்லி

அம்பாறை பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட மாணவி பாத்திமா அஸ்லி

by mahesh
January 3, 2024 11:59 am 0 comment

அம்பாறை பிரதான நகரிலுள்ள பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவி பாத்திமா அஸ்லினுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு பாடசாலை அதிபர் ஷூயானி விஜேகோன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் இரண்டாம் மொழி (சிங்களம்) பேச்சுப் போட்டியில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகி வடக்கு, கிழக்கில் இம்முறை பேச்சுப் போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்ற ஒரேயொரு மாணவியான இவர், கிழக்கு மாகாணத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அம்மாணவிக்கு அம்பாறை பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் சிங்கள மாணவர்களுக்கு மத்தியில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சிங்கள மாணவர்கள் மத்தியில் ‘தாய்நாட்டின் அற்புதங்கள்’ என்ற பேச்சை நிகழ்த்திக் காட்டினார். இதேவேளை சிங்கள மாணவர்களால் வழங்கப்பட்ட ‘குழந்தைகளே எதிர்காலத் தலைவர்கள்’ என்ற பிறிதொரு தலைப்பிலும் இம்மாணவி சிங்கள மொழியில் உரையாற்றினர்.

மாணவி பாத்திமா அஸ்லினின் உரையை பாடசாலையின் அதிபர் பாராட்டிப் பேசியதோடு, தமிழ்மொழி மூலமான முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று சிங்கள மொழியில் இவ்வாறான சாதனையை நிகழ்தியது இனநல்லுறவுக்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றும் தெரிவித்தார்.

சாதனை மாணவி பாத்திமா அஸ்லின் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையில் தரம் 08 இல் கல்வி கற்று வருகின்றார். கல்வியில் திறமையை வெளிக்காட்டி வரும் இவர் வலயமட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்ட போட்டிகள் பலவற்றிலும் பங்குபற்றி சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திருமதி எம்.ஐ.பாத்திமா ஷர்மதா ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.ஷினாஸ் (பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT