ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடக்கம்; ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு | தினகரன்

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடக்கம்; ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், முந்தைய நாள் (14) நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காது என ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 1.2 பில்லியன் டொலர் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகி விட்டனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிர்ப்பதால் கடந்த ஆண்டில் இருந்தே சரியான திகதிக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்தே வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக விமானிகள், பொறியியலாளர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் சம்பளம் தராமல் இழுத்தடித்து வருகிறது.

இதனால் விரக்தியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முநதையநாள்(14) நள்ளிரவு முதல் விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாகவும், ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்காது என்றும் அறிவித்திருந்தனர்.

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் யூனியன் தலைவர் கேப்டன் கிரன் சோப்ரா இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், இதுவரை எங்களால் நிறுவனத்தை காப்பாற்ற முடிந்த அளவு பங்களிப்பை செய்து வந்தோம். இப்போது எல்லை மீறி போய்விட்டது. இனி எங்களால் முடியாது. எங்கள் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா மக்களவைத் தேர்தலொன்றை முகம்கொடுக்கவுள்ள நிலையில் இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 23,000 பேரின் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உரிமத்தில் 52 வீத பங்கு நரேஷ் கோயலுக்கும் 24 வீத பங்கு எடிஹாட் விமான நிறுவனத்துக்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Add new comment

Or log in with...