Friday, March 29, 2024
Home » இனமத பேதங்களை மறந்து செயற்படுவதன் அவசியம்

இனமத பேதங்களை மறந்து செயற்படுவதன் அவசியம்

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

இலங்கை மக்கள் மற்றொரு புதிய ஆண்டுக்குள் பிரவேசித்து இருக்கிறார்கள். இது முக்கியத்துவம் மிக்க ஆண்டாக உள்ளது. நாட்டின் இரண்டு முக்கிய தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறவிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஜனாதிபதித் தேர்தல், மற்றையது பொதுத்தேர்தல். ‘இவ்வருடம் (2024) தேர்தல்கள் வருடமாக இருக்கும்’ என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கான ஏற்பாடுகளை சில அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. சிலர் தேர்தலை இலக்காகக் கொண்ட பிரசாங்களையும் கூட தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் 2024 ஆம் ஆண்டின் புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஒவ்வொரு அமைச்சிலும் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அந்த வகையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர், ‘பிறந்திருக்கும் புதுவருடமான 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் எந்தத் தேர்தல் வந்தாலும் இன, மத, மொழி பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது’ என்று சுட்டிக்காட்டியதோடு, ‘நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவின் இந்த கருத்தும் வலியுறுத்தலும் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியதாகும். அதுவே நாட்டின் அபிவிருத்தியையும் அமைதி சமாதானத்தையும் உண்மையாகவே விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கடந்த கால அனுபவங்களின் பின்புலத்தில்தான் அமைச்சர் இக்கருத்தை முன்வைத்திருக்கிறார்.

கடந்த காலங்களில் தேர்தல்கள் நெருங்கியதும் இன, மத, மொழி பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் முயற்சிப்பது வழமையாகும். அற்ப நலன்களை அடைந்து கொள்வதே அவர்களது இலக்கு. ஆனால் அவர்கள் விதைக்கும் இன, மத, மொழி ரீதியிலான பிரிவினைக்கு வித்திடும் முயற்சிகளின் பாரதூரம் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

மக்களின் வாக்குகளை தம் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் வகையிலான இவ்விதமான முயற்சிகள் மக்கள் மத்தியில் தவறானதும் பிழையானதுமான அபிப்பிராயங்களை உருவாக்க வழிவகுக்கவே செய்கின்றன. நாடு முகம்கொடுத்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குக் கூட இவ்விதமான முயற்சி துணைபுரிந்தமை மறைக்க முடியாத உண்மையாகும்.

கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடிக்கும் கூட இவ்விதமான முயற்சி பாரிய பங்களிப்பு நல்கின. பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் இன, மத, மொழி ரீதியிலான பார்வைகளும் பிரிவினைகளும் எவ்விதத்திலும் நன்மை பயக்கக்கூடியவை அல்ல. அவை நாட்டின் பின்னடைவுக்கே வழிவகுக்கும். அது தொடர்பிலான அனுபவத்தை நாடு கடந்த காலத்தில் பெற்றுள்ளது.

அதனால் இனிவரும் தேர்தல்களில் அற்ப நலன்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இன, மத, மொழி ரீதியிலான பிரசாரங்களை முன்னெடுக்கும் சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் முயற்சிகள் நிராகரிக்கப்படுவது அவசியம். இது நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருடம் தேர்தல்கள் ஆண்டாக அமைந்திருக்கிறது. அதனால் தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அற்ப நலன்களை அடைந்துகொள்ள இடமளிக்கக் கூடாது. அமைச்சர் குறிப்பிடுவது போன்று நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுவே இன்றியமையாததாகும். கடந்த காலத்தில் விட்ட தவறுகள், பிழைகள் இனியும் விடப்படலாகாது.

ஆகவே கட்சி அரசியல் பேதங்களுக்கும் இன, மத, மொழி ரீயிலான பார்வைக்கும் அப்பால் தேசிய பார்வையோடு நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுவே நாட்டில் உண்மையான பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வழிவகுக்கும். அத்தோடு சுபீட்சமான பொருளாதார வசதிகளை மக்கள் பெற்றுக்கொள்ளவும் அது வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT