விவசாயம் உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு உலக வங்கி 151.8 மில். ரூபா நிதி உதவி | தினகரன்

விவசாயம் உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு உலக வங்கி 151.8 மில். ரூபா நிதி உதவி

மூன்று வெவ்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காக உலக வங்கி 151.8 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 150 மில்லியன் ரூபா கடனாகவும் எஞ்சிய 1.8 மில்லியன் ரூபா நன்கொடையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தனித்தனி ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் வொஷிங்டனில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கம் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் டொக்டர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் உலக வங்கி சார்பில் தெற்காசிய பிராந்தியத்துக்கு பொறுப்பான உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் நாட்டின் 11 உலர் வலயங்களின் காலநிலைக்கு ஏற்ற விவசாய செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் சுமார் 62,000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைய முடியுமென நிதியமைச்சு தெரிவிக்கின்றது.

காலநிலை மாற்றத்தால் விவசாயத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. பொலன்னறுவை, அநுராதபுரம்,ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, குருணாகலை, மொனராகலை, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் முகமாகவே இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலக வங்கியின் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந் நிதியானது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க மற்றும் தனியார் செயற்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.

அத்துடன் உலக வங்கியின் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி காலநிலையால் ஏற்படக்கூடிய சவால்களை முறியடிக்கும் வேலைத்திட்டத்துக்காக மேலும் 1.8 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

 

 


Add new comment

Or log in with...