3 நாட்களில் பிரசாரம் முடிவு | தினகரன்

3 நாட்களில் பிரசாரம் முடிவு

சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்கள் தீவிரம்

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால் மத்திய சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகநூல், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்பாக வட்ஸ்அப்பில் வேட்பாளரின் தினசரி வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி, முந்தைய நாளில் வேட்பாளரின் பேச்சு, வாக்கு சேகரித்த இடங்களின் புகைப்படங்கள், வேட்பாளரின் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு அவர்களின் பிரச்சாரத்துக்கு வலுசேர்த்து வருகின்றனர். இளைஞர்களும் இளம்பெண்களும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் வேட்பாளரின் பிரசாரப் பதிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.

இந்நிலையில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வால்டாக்ஸ் சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் கட்சியினருடன் நடந்து சென்று வாக்குசேகரித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, சென்னை எம்எம்டிஏ காலனியில் உள்ள கண்ணப்பர் நகரில் தயாநிதி மாறனுக்காக நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தார். முதல்முறை வாக்களிக்கவுள்ள இளம் பெண்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள் என்று அப்பகுதியில் இருந்த அனைவரிடத்திலும் செல்வி வாக்கு கேட்டார்.

ஐசிஎப் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தைத் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர், காந்தி நகர் குடியிருப்பு, அயனாவரம் வெள்ளாள தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது கமீலா நாசர் பேசும்போது, “நானும் 50 ஆண்டுகளாக குறிப்பிட்ட கட்சிகளுக்குத்தான் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தேன். எனவே, நீங்கள் இந்த முறை புதியவர்களுக்கு வாக்களியுங்கள் ” என்று கேட்டுக் கொண்டார். பாமக வேட்பாளர் சாம் பால் நேற்று சூளை, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் தெக்லான் பாகவி, அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட என்.எஸ்.கே. நகர், பிரிவரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களுடைய சின்னம் இடம் பெற்றுள்ள எண் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை விநியோகித்தனர்.


Add new comment

Or log in with...