பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெருக்க மாற்றுவழிகள் தேவை | தினகரன்

பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெருக்க மாற்றுவழிகள் தேவை

இலங்கையில் எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கான தொழில் இல்லாப் பிரச்சினை பெரும் சிக்கல்களை ஏற்படுத்தப் போவது இப்போதே தெரிகின்றது. பட்டதாரிகள் தங்களுக்குத் தொழில் வழங்குமாறு குரல் எழுப்புவது நாடெங்கும் கேட்கின்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் பட்டதாரிகளின் போராட்டங்களும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.

இப்பிரச்சினையானது எதிர்காலத்தில் சமாளிக்க முடியாதபடி பெரும் சிக்கலாக உருவெடுக்கத்தான் போகின்றது. இந்த நெருக்கடிக்கு ஓரளவாவது தீர்வு காண்பதற்கு கடந்த கால அரசாங்கங்களிடம் எந்தவொரு உருப்படியான திட்டமும் இருந்ததில்லை. எனவே பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை உருப்பெருத்துக் கொண்டே போகின்றது.

நாடெங்கும் பல்லாயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு எதுவுமின்றி உள்ளார்கள். இவர்களில் பலர் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லையையும் இவர்கள் கடந்து விடக் கூடும். அதன் பிறகு இவர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பொன்றைப் பெறுவதும் முடியாத காரியமாகிப் போய் விடும். இவர்களால் ஏதாவது சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதும் இயலாத விடயம்.

பட்டப்படிப்பை முடித்த பின்னர் கடந்த பத்து வருட காலத்துக்கு மேலாக சுயதொழில் முயற்சியொன்றுக்கு முற்படாதவர்கள் இனிமேல் அவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபடுவதற்கான சாத்தியம் இல்லை. ஆகவே இவர்களது எதிர்காலம் எவ்வாறானதாக அமையப் போகின்றது என்பதுதான பிரதான கேள்வி!

நாட்டிலுள்ள அத்தனை பட்டதாரிகளுக்கும் அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதென்பது எந்தவொரு அரசாங்கத்தினாலும் இயலாத காரியமாகும். ஏனெனில் அத்தனை பேருக்கும் தொழில் நியமனம் வழங்குவதற்கான வெற்றிடங்கள் அரசாங்கத் துறையில் கிடையாது. அவ்வாறான பல்லாயிரக்கணக்கானோருக்கு தொழில் நியமனங்களை வழங்கி அவர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதி கிடையாது.

நாட்டில் தேர்தல்கள் வருகின்ற காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கமாகும். அதேசமயம் பட்டதாரிகள் அத்தனை பேருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படுமென்ற உறுதிமொழியையும் அரசியல் கட்சிகள் வழங்குவதுண்டு. ஆனால் இவையெல்லாம் போலி வாக்குறுதிகள்!

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டுமானால் புதிய தொழில்துறைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். இன்றைய நவீன யுகத்தை கருத்தில் கொண்டு அதிக வருமானமும் ஏராளமான தொழில்வாய்ப்புகளையும் தரக் கூடிய துறைகளில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும்.

இல்லையேல் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் துறையினர் இங்கு பாரிய தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கான ஏற்பாடுகளிலாவது அரசாங்கம் ஈடுபட வேண்டும். அப்படியானால் தனியார் துறையிலாவது அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையை பெருமளவில் குறைத்துக் கொள்வதற்கு வழியேற்படும். ஆனால் அவ்வாறான முயற்சிகள் கண்களுக்குத் தென்படுவதாக இல்லை. எமது நாட்டில் தனியார்துறை தொழில்வாய்ப்புகள் பெருகியிருப்பின் இத்தனை எண்ணிக்கையிலான பட்டதாரி இளைஞர்களும் யுவதிகளும் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை உருவாகியிருக்காது.

இங்கு உண்மையைக் கூறுவதானால் நாட்டில் வருடாவருடம் பட்டதாரிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகுகிறதேயொழிய, அவர்களுக்குத் தொழில் வழங்குவதற்கான வாய்ப்புகள் பெருகுவதில்லை என்பதே சரியாகும். பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கும் விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத நெருக்கடியையும் இவ்விடத்தில் குறிப்பிடாமலிருப்பது பொருத்தமல்ல. இவ்விடயத்தைப் பொறுத்தவரை பட்டதாரிகள் தரப்பிலும் குறைபாடுகள் இல்லாமலில்லை.

பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து வெளியேறிய பின்னர் இளைஞர், யுவதிகள் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது ஆசிரியத் தொழில் ஆகும். ஏனெனில் இப்பட்டதாரிகளில் கூடுதலானோர் கலைப்பட்டதாரிகளாவர். இல்லையேல் வர்த்தகத் துறையினர். இலங்கையில் உள்ள பட்டதாரிகள் வெளிநாடுகளில் உள்ளோரைப் போலன்றி அரசாங்கதுறை வேலைவாய்ப்பில் மாத்திரமே குறியாக உள்ளனர். அதிலும் அவர்களில் பெருமளவானோரின் எதிர்பார்ப்பு ஆசிரியத் தொழில்!

கலை, வர்த்தகப் பட்டதாரிகளைப் பொறுத்தவரை ஆசிரியத் தொழில் தவிர்ந்த வேறு தொழில்களுக்குத் தாங்கள் பொருத்தமில்லையென்று எண்ணுகின்றனர். அது அவர்களது பலவீனமான சிந்தனையாக இருக்கக் கூடும். இன்றைய நவீன யுகத்துக்குப் பொருத்தமில்லாத பட்டப்படிப்பையே தாங்கள் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

அவர்களது எண்ணம் அவ்வாறிருப்பினும், பல்கலைக்கழக பட்டம் பெற்ற பின்னர் இன்றைய நவீன காலத்துக்குப் பொருத்தமான வெளிவாரி கற்கைநெறிகள் ஏராளமாகவே உள்ளன. அவர்கள் அவ்வாறு முயற்சி செய்யாமல் வெறுமனே பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் காலத்தை வீணாக்குவதே உண்மையில் அவர்களது பலவீனம்! அது ஒருபுறமிருக்க, எந்தவொரு பல்கலைக்கழக பட்டப்படிப்பு தகைமையையும் தம்வசம் கொண்டிருக்காத எத்தனையோ இளைஞர், யுவதிகள் ஏதோவொரு சுயதொழில் துறையைத் தேர்ந்தெடுத்து பெரும்பணமீட்டி வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதேசமயம் பல்கலைக்கழக பட்டம் பெற்ற இளைஞர், யுவதிகள் பலர் தனியார் துறை வேலைவாய்ப்பில் இணைந்து தங்களுக்கான நிரந்தரத் தொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதையும் நாம் காண்கிறோம்.

அரசாங்க துறையில் நியமனம் பெறுவதென்பது உண்மையிலேயே இன்று சவால் நிறைந்த போராட்டமாகியிருக்கிறது. அரசாங்க துறையில் இவர்கள் அத்தனை பேருக்குமான ஆசிரியர் வெற்றிடங்களோ அல்லது ஏனைய பதவிகளுக்கான வெற்றிடங்களோ கிடையாது என்பதுதான் உண்மை! இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இழைத்த பெரும் தவறு, நாட்டில் தனியார் தொழில்துறையை ஊக்குவிக்காமல் விட்டதேயாகும். தனியார் தொழில் துறையை அரசு ஊக்குவிக்குமானால் பட்டதாரி இளைஞர்களில் பலர் அத்துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பர். அரசாங்கத் தொழில் மீதான மோகமும் குறைந்திருக்கும்.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் நடவடிக்கை, தனியார் தொழில்துறையைப் பெருக்க வேண்டியதே ஆகும். அந்நடவடிக்கையானது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவுமென்பது உறுதி.


Add new comment

Or log in with...