Thursday, March 28, 2024
Home » இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வடக்கு காசாவை நோக்கித் திரும்பும் பலஸ்தீனர்கள்

இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வடக்கு காசாவை நோக்கித் திரும்பும் பலஸ்தீனர்கள்

தெற்கில் தொடர்ந்து தாக்குதல்: உயிரிழப்பு 22,000 ஆயிரத்தை நெருங்கியது

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் தெற்கு மற்றும் மத்திய காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது வடக்கில் இருந்து சில துருப்புகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. வடக்கு பகுதியில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையின் தீவிரத்தை குறைப்பதற்கான சமிக்ஞையாக இது உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காசாவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு பெரும் பகுதி இடிபாடுகளாக மாற்றி அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இந்தப் போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

எனினும் காசாவில் இருந்து சில படையினரை வாபஸ் பெறுவது மற்றும் மேலும் பல மாதங்களுக்கு போரை நடத்தும் வகையில் உள்ளுர் மட்டத்திலான தேடுதல் நடவடிக்கைகளாக போரை மாற்றுவது பற்றிய திட்டத்தை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்பினர் வெளியேறிய நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அந்தப் பகுதிக்கு திரும்பி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“இங்கு திரும்பிய மக்கள் எல்லா இடங்களிலும் இரத்தம் மற்றும் பிண வாடை அடிக்கும் நிலையிலும் இடிபாடுகளுக்கு மேல் இருந்துகொண்டும் உறங்கியும் வருகின்றனர்” என்று இந்தப் பகுதிக்கு திரும்பி இருக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இங்கு பல படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆக்கிரமிப்பு இராணுவத்தை விடவும் மக்களின் எதிர்ப்பு எப்போதும் வலுவானதாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போதுமான உணவு மற்றும் குடிநீர் இல்லாதபோதும் வடக்கு காசாவை ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று மற்றொரு பெண் தெரிவித்துள்ளார். “வேதனைகளுக்கு முகம் கொடுத்தபோதும் நான் எனது நிலம், வீடு மற்றும் குடும்பத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்றார்.

இந்தப் போரின் ஆரம்பத்தில் தீவிர தாக்குதலுக்கு முகம்கொடுத்த வடக்கு பகுதியில் உள்ள காசா நகரின் ரத்வான் பகுதியில் இருந்து டாங்கிகள் வாபஸ் பெறப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காசா நகரின் ஏனைய பகுதிகளில் இருந்தும் டாங்கிகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த முடிவு வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை குறைந்த தீவிர நிலைக்கு மாற்றுவதை காட்டுவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் உயிரிழப்புகள் அதிகரித்து, போர் நிறுத்தத்திற்கு சர்வதேசத்தின் அழைப்பு அதிகரித்து வரும் சூழலில் போரின் தீவிரத்தை குறைக்கும்படி அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் உக்கிர தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா எங்கும் நேற்று முன்தினம் (01) இரவு தொடக்கம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா நேற்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இடம்பெற்ற மற்றொரு வான் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கி 21,978 ஆக அதிகரித்திருப்பதோடு 57,697 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“2024 ஆம் ஆண்டில் எனது நோக்கம் உயிரிழக்காமல் இருப்பதாகும். இங்கே குளியலறை, உணவு மற்றும் நீர் எதுவும் இல்லை. கூடாரங்கள் மாத்திரம் தான் இருக்கின்றன” என்று காசாவின் ரபா பகுதியில் இருக்கும் 11 வயது லயான் ஹராரா என்ற சிறுவன் கூறுகிறான். அந்த நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையின் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பசித்த விலங்குகளுக்கு இடையே மக்கள் முகாம்களை அமைத்துள்ளனர்.

எனினும் காசாவில் 12 வாரங்க கடந்து போர் நீடித்தபோதும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திறன் பெற்றிருப்பதோடு, டெல் அவிவ் மீதும் தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது 240 பணயக்கைதிகளை பலஸ்தீன போராளிகள் பிடித்த நிலையில் குறுகிய கால போர் நிறுத்தம் ஒன்றில் பணயக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டபோதும் தொடர்ந்து 129 பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இதில் இஸ்ரேலின் தாக்குதல்கள், மீட்பு முயற்சிகள் அல்லது தப்பிச் செல்லும் முயற்சிகளில் சில பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

புதிய போர் நிறுத்தம் ஒன்று மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் கட்டார் மற்றும் எகிப்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

“ஹமாஸின் பயங்கரவாத உட்கட்டமைப்பு அழிக்கப்படாமல், அதன் நிர்வாகத் திறன் ஒழிக்கப்படாமல், போர் முடிவுக்கு வராது” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் உறுப்பினர் ஒருவரான அவி டிச்டர், ‘கான்’ வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை மற்றும் அங்குள்ள இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் குறைந்தது 320 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT