சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் பதவி கவிழ்ப்பு | தினகரன்

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் பதவி கவிழ்ப்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாட்டம்

கடந்த மூன்று தசாப்தங்களாக சூடானில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை இராணுவம் நேற்று பதவி கவிழ்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான இடைக்கால சபை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பஷீர் பதவி விலகிவிட்டதாகவும் ஆளும் இராணுவ கெளன்சில் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அரச வட்டாரங்கள் மற்றும் வடக்கு டாபூரின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளங்கள் அமைச்சர் அப்தல் மஹ்ஜுப் ஹுஸைன் துபாயை தளமாகக் கொண்ட அல் ஹதத் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

75 வயதான பஷீர் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சூடான் தரப்புகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இராணுவம் நேற்று அரச தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்றை வெளியிடவிருந்தது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் தலைநகரின் பிரதான வீதிகள் மற்றும் பாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஆளும் தேசிய கொங்கிரஸ் கட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்றான பஷீரின் இஸ்லாமிய அமைப்பு தலைமையகத்தை இராணுவம் நேற்று சுற்றிவளைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வெளியில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பஷீருக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. “வீழ்ந்து விட்டது, நாம் வென்றோம்” என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்புகின்றனர்.

“நாம் 30 ஆண்டுகளாக காத்திருந்த நல்ல, மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட்டார்.

அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் தேசப்பற்று பாடல்களை வெளியிட்டு வருவதோடு, முந்தைய இராணுவ சதிப்புரட்சிகளின்போது நிகழ்ந்ததை வெளிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.

பஷீருக்கு என்ன ஆனது என்பது பற்றி பிந்திய செய்திகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. 2003ஆம் ஆண்டு சூடானின் டாபூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது சுமார் 300,000 பேர் கொல்லப்பட்டது தொடர்பில் பஷீர் மீது ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதோடு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பரசூட் வீரரான பஷீர் 1989 ஆம் ஆண்டு இரத்தம் சிந்தப்படாத இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் மேற்கத்தேய உலகின் அழுத்தத்திற்கு மத்தியில் பஷீர் தனது ஆட்சியை நீண்டகாலம் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

தீவிரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடாக சூடானை அமெரிக்கா அறிவித்த பின் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக அது இருந்து வருகிறது. நான்கு ஆண்டுகள் கழத்து அமெரிக்கா சூடான் மீது கடுமையான தடைகளை விதித்தது.

பஷீரின் வாசஸ்தலம் அமைந்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கு வெளியில் அவரை பதவி விலகக் கோரிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வார இறுதி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது படையினர் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததால் மோதல் வெடித்தது. இது ஆயுதப் படைகளில் ஆறு உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

எரிபோருள், பணப் பற்றாக்கு இடையே பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கு சூடானில் அரசு ரொட்டி விலையை அதிகரிக்க முயன்றதால் கடந்த டிசம்பர் 19 தொடக்கம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...