கருந்துளையின் முதல் படம் வெளியீடு | தினகரன்

கருந்துளையின் முதல் படம் வெளியீடு

தொலைதூர பால்வெளி மண்டலம் ஒன்றில் அமைந்திருக்கும் கருந்துளை ஒன்றின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூமியை விடவும் மூன்று மில்லியன் மடங்கு பெரிய 40 பில்லியன் கிலோமீற்றர் குறுக்களவு கொண்ட இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் ‘ஒரு அரக்கன்’ என்று வர்ணித்துள்ளனர்.

500 மில்லியன் டிரில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளை உலகெங்கும் உள்ள எட்டு தொலைநோக்கி வலையமைப்பு மூலம் படமெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் உலகில் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது பற்றிய விபரம் அஸ்ட்ரோபிசிக்ஸ் சஞ்சிகையில் வெளியானது.

எம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி ஒன்றிலேயே இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த பரிசோதனையை முன்மொழிந்த, நெதர்லாந்து ரெட் பெளண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹைனோ பல்கே குறிப்பிட்டார்.

“நாம் பார்ப்பது எமது ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தை விடவும் பெரியதாகும்” என்றும் அவர் விபரித்தார். “அது சூரியனை விடவும் 6.5 பில்லியன் மடங்கு நிறை கொண்டதாகும். நாம் அறிந்ததில் அதிக எடை கொண்ட கருந்துளையாக இது உள்ளது. இது உண்மையிலேயே ஒரு அரக்கன், பிரபஞ்சத்தில் அதிபார சம்பியனான கருந்துளை” என்றும் அவர் கூறினார்.

இந்தப் படம் ஒரு நெருப்பு வளையம் போன்று காட்சி அளிக்கிறது. இதனைச் சூழவுள்ளவை கருந்துளையை கச்சிதமாக வலம்வருகிறது என்று பேராசிரியர் பல்கே குறிப்பிட்டார்.

துளைக்குள் விழுங்கப்படும் அதிக வெப்பம் கொண்ட வாயு வெளிச்சமாக ஒளிவட்டம் ஏற்படக் காரணமாகும். இதன் ஒளி அந்த பால்வெளி மண்டலத்தில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திடங்களின் ஒளியை விடவும் அதிக பிரகாசம் கொண்டதாகும். இதனாலேயே இத்தனை தொலைவில் இருக்கும் பூமியில் இருந்து அதனை தெளிவாக காண முடிகிறது.

இதன் மையத்தில் இருக்கும் இருண்ட வட்டம் ஒளி கூட தப்ப முடியாத சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையை கொண்ட பகுதியாகும். இந்த புள்ளியாலேயே கருந்துளைக்குள் வாயு நுழைகிறது.

லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி ஜிரி யூன்சி கூறுகையில், “கோட்பாட்டு அடிப்படையில் விஞ்ஞானிகள் வகுத்து வைத்திருந்த உருவத்துடன் இந்த கருந்துளை புகைப்படம் ஒத்துப்போவது ஆச்சரியமாக உள்ளது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது” என்றார்.

அண்ட வெளியின் மர்மங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருந்துளையின் இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கோட்பாடு பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டதாகும்.

1967இல் முதன் முதலாக ஜோன் வீலர் என்ற பெளதீகவியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சுப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு கூறுகிறது.


Add new comment

Or log in with...