இந்திய தேர்தல் ஆரம்பம் | தினகரன்

இந்திய தேர்தல் ஆரம்பம்

இந்திய மக்களவைத் ​தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்றுத் தொடங்கியது.7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்றுத் தொடங்கியுள்ளது.

இதுதான் உலகின் மிக நிதிச் செலவு மிகுந்த தேர்தல் ஆகும். இந்த தேர்தலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 90 கோடி மக்கள் வாக்களித்து அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிவு செய்ய உள்ளனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தன. காலை முதலே ஏராளமான ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததைக் காண முடிந்தது.

முதல் கட்ட தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான்- நிகோபர் தீவுகள், தெலங்கானா , உத்தரகண்ட் என 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இதுதவிர, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு, பாரமுல்லா ஆகிய தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது.

நேற்றைய வாக்குப்பதிவில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,279. இவர்களது தலையெழுத்தை 14 கோடி 20 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்வதன் மூலம் நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் 7,764 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 3957 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 20 மாநிலங்களில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேவேளையில், பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.மே 23ம் திகதி முடிவுகள் தெரிந்து விடும்.

இதேவேளை ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒரிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒரிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் திகதியன்று நடைபெறும்.


Add new comment

Or log in with...