Friday, March 29, 2024
Home » கிழக்கு மாகாணத்தில் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by mahesh
January 3, 2024 10:10 am 0 comment

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அடை மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலேயே அதிகளவில் மழை பெய்துவருகின்றது.

அம்பாறை

அம்பாறையில் மழை பெய்வதால் வீதிகளில் வௌ்ளம் தேங்கியுள்ளதுடன், குளங்களும் நிரம்பிய நிலையில், அவற்றின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இங்கினியாகலை சேனநாயக்க சமுத்திரத்தின் 4 வான்கதவுகள் நேற்று (02) காலை திறக்கப்பட்டதால், கரையோர இடங்களில் வெள்ளம் பரவுகிறது.

ஆகையால், கரையோர இடங்களில் வாழும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் கேட்டுள்ளார்.

அம்பாறையின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3,997 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 256 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 81 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச ஆறுகளை அண்டிய குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸிக் அறிவித்துள்ளார்.

அனர்த்த நிலையின் போது சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலயம், சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தை பயன்படுத்துமாறும், அவசர தேவைகளுக்கு கிராம அலுவலர்களின் உதவியை நாடுமாறும், அவர் அறிவித்துள்ளார்.

பாலமுனை, திராய்க்கேணி, ஜலால்தீன்புரம், உதுமாபுரம், ஹூஸைனியாநகர் மீள்குடியேற்ற தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மேலாக வெள்ளம் பாய்வதுடன், கஞ்சிகுடிச்சாறு குளமும் வான்பாய்கின்றது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் மழை பெய்வதால் பாரிய குளமான உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டன.

உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

மழை வெள்ளத்தால் வவுணதீவு -ஆயித்தியமலை பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதி மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டது.

மாவிலாறு மற்றும் வெருகல் கங்கையினூடாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதுடன், மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுத்து வெள்ளநீர் பரவிச் செல்கிறது.

இதனால் வெருகலம்பதி ஆலயம் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளதுடன், ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெறவில்லை.

இதேவேளை, வெள்ளம் பரவியுள்ளதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, வட்டவான், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 132 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 660 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் மற்றும் நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்குத் தயாராய் இருந்த வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.

திருகோணமலை

கடும் மழையால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெருகல் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வட்டவான், சேனையூர், மாவடிச்சேனை கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக சுமார் 229 குடும்பங்களை சேர்ந்த 642 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களுள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்துமகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மயிலப்பன்சேனை, சோலைவெட்டுவான், காரவெட்டுவான், கண்டல்காடு ஆகிய இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து நேற்றுடன் (02) 6 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாளிகைக்காடு குறூப், காரைதீவு குறூப், பாலமுனை கிழக்கு தினகரன், கல்லடி குறூப், தம்பலகாமம் குறூப், தோப்பூர் குறூப், ஒலுவில் விசேட, ஏறாவூர் சுழற்சி, புதிய காத்தான்குடி தினகரன், வாச்சிக்குடா விசேட, நற்பிட்டிமுனை தினகரன், பெரியபோரதீவு தினகரன், கல்முனை குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT