ஊடக தர்மம் தோன்றட்டும்! | தினகரன்

ஊடக தர்மம் தோன்றட்டும்!

ஊடகத்துறையும் அரசியல்துறையும் பிளவுபடுவது நாட்டின் முன்னேற்றப் பயணத்துக்கு பெரும் தடையாக அமைவதாகவும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். ஊடகத்துறையினர் அதன் மகத்துவத்தை உணராமல் சுயநல போக்கில் செயற்பட முனைவது தேசத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கின்றார்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருக்கின்றார். ஊடகத்துறையின் இன்றைய போக்கு நாட்டை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதை அவதானிக்கக் கூடியதொரு நிலையில் அரசியல்துறையும் ஊடகத்துறையும் நேர்மையுடன் இயங்க வேண்டிய கட்டாயத் தேவைப்பாட்டை ஜனாதிபதி ஊடகத்துறையினர் மத்தியிலேயே தெரிவித்திருப்பதோடு, ஊடகத்துறையில் காணப்படும் முரண்பாடுகள், சுயநலச் செயற்பாடுகளையும் கண்டனம் செய்துள்ளார்.

இன்று குறிப்பிட்ட சில ஊடகங்கள் தனிநபர்கள் மீதான வசைபாடுவதையும், சேறு பூசுவதையும் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. ஊடக சுதந்திரமென இதனைக் கூறித் திரிகின்றனர். ஊடக தர்மத்தின் கோட்பாடுகளை சரிவரப் புரிந்து கொள்ளாமையே இதற்கான காரணமாகும். ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவோர் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஊடகத்துக்கென ஒழுக்கநெறிக் கோவையொன்று காணப்படுகின்ற போதிலும் பெரும்பாலான ஊடகங்கள் அதனை கண்டு கொள்வதில்லை.

வெளிப்படையாக நோக்குகின்ற போது இன்று ஊடகங்கள் அதன் சுயத்தை இழந்திருப்பதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சுயநல அரசியல் நோக்கங்களை ஈடு செய்து கொள்வதன் பொருட்டு பழிவாங்கும், சேறு பூசும் செயற்பாடுகளை ஊடகக் கலையாக அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ஊடகங்கள் பொதுவெளியிலிருந்து சிந்திக்க மறுக்கின்றன.

இதன் காரணமாக ஊடகத்துறை மீதான மக்களின் நம்பிக்கை அற்றுப் போவதையே காண முடிகிறது. இதனை ஆரோக்கியமானதொன்றாகக் கருத முடியாதுள்ளது.

ஊடகம் ஜனநாயக கட்டமைப்பின் நான்காவது தூணாகக் காணப்படுகின்றது. நான்கு தூண்களும் உறுதியாக இருக்கும் போது தான் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டதாக அமைய முடியும். ஆனால் ஊடகம் என்ற தூண் உறுதிமிக்கதாகக் காணப்படவில்லை. அது எமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் பார்க்கும் போதும் கூட ஊடகத்துறை முரண்பாட்டுப் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக எவரும் தன்னிச்சையாகச் செயற்பட இடமளிக்க முடியாது. ஊடக தர்மத்தின் கோட்பாட்டுக் கட்டமைக்குள் இருந்துதான் ஊடகங்கள் செயற்பட முடியும். அதுதான் ஊடக ஒழுக்கநெறியும் கூட.

'ஊடகம் தேசத்தின் காவலன்' என்ற மொழிக்கொப்ப ஊடகத்துறை எப்போதும் தேசத்தின் காவலனாகச் செயற்பட வேண்டும். ஊடகம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்து கொள்ளாத வரை எந்தவொரு ஊடகமும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முடியாது.

தனிச்சிறப்பு மிக்க ஊடக கலாசாரமொன்றை நாட்டில் கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி ஊடக விருது விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் நோக்கம் சரியான அடைவை பெற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்புமிக்க ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக, சமய, அரசியல் துறைகளினதும் பொதுமக்களதும் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

ஊடகங்கள் தொடர்பில் நாம் கடந்த காலங்களில் மிகவும் கசப்பான அனுபவங்களையே கண்டு கொண்டோம். ஊடகப் பயன்பாட்டின் குறைந்தபட்ச தார்மீக ஒழுக்கமாண்பை பாதுகாப்பதில் பல ஊடக நிறுவனங்கள் தவறியுள்ளன. அரச ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவும், தனியார் ஊடகங்கள் அவற்றின் நிருவாகக் கட்டமைப்புக்குள்ளும் இருந்து செயற்பட்டதன் காரணமாக எமது நாட்டில் ஊடக மேம்பாடு கடந்த காலத்தில் சீர்குலைந்து போயுள்ளது. இதனைக் காப்பாற்றி கட்டியெழுப்புவதில் காட்டப்படும் அக்கறை வரவேற்கத்தக்கதாகும். இதனுள்ளும் சில பொருத்தமற்ற பேர்வழிகள் நுழைந்திருப்பது விசனிக்கத்தக்கதாகும்.

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மனித சமூகத்துக்கு எதிரான, தவறான செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது ஊடகத்துறை எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்பதை சிந்தித்துச் செயற்பட முன்வர வேண்டும். ஊடக தர்மத்தை மீறி சுயநல நோக்கில் ஒருபோதும் செயற்பட முனையக் கூடாது. அப்படிச் செய்வது மனித இனத்துக்கும் தனது நாட்டுக்கும் செய்யும் துரோகச் செயலாகவே நோக்க முடியும்.

பக்கச்சார்பான ஊடகப் பாவனையைக் கடந்து அர்த்தமுள்ள ஊடக கலாசாரத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்குள் நாம் உள்ளோம். இனம், மதம், மொழி கடந்து தூய்மையான ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்பி ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதில் எமது முழுமையான சிந்தனையை செலுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள, செழிப்பான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். எமது நாளைய சந்ததிக்காக இந்தப்பாரிய பணியில் ஒன்றுபட முன்வருவோமாக!


Add new comment

Or log in with...