Thursday, April 25, 2024
Home » பொருளாதாரம் மீட்சிபெற்ற ஆண்டாக 2024 மாற வேண்டும்

பொருளாதாரம் மீட்சிபெற்ற ஆண்டாக 2024 மாற வேண்டும்

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

by mahesh
January 3, 2024 8:20 am 0 comment

மலர்ந்திருக்கும் 2024ஆம் ஆண்டு இலங்கை தேசம் பொருளாதாரத்தில் மீட்சிபெற்ற ஆண்டாக மாற்றம் பெற வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும். பொருளாதாரம் மீட்சி பெற்ற நம் தேசத்தில் வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் நாடு முழுவதிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் சமூக கலாசாரரீதியிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு காணப்பட்ட ஆண்டாகவும் மாற வேண்டுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2022 ஆம் ஆண்டில் இருண்ட பாதைக்குள் பயணித்துக் கொண்டிருந்த தேசமாகவே இலங்கை காணப்பட்டது. அக்காலப்பகுதியில் நாம் அனைவரும் சொல்லொணாத் துயரங்களையும் தாங்க முடியாத துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அத்தகைய இருண்ட காலப்பகுதி நம் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாததாகும். உணவுக்கே வழி இல்லாத நிலைமை உண்டான போது நம் நாட்டையும் நமது மக்களையும் உலகம் கண்டு கொள்ளவில்லை. சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்கு செல்லவிருந்த நமது நாட்டை தனி மனிதனாக காத்து இரட்சித்த பெருமையும் புகழும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரித்தாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்க்கதரிசன மிக்க சிந்தனாவாதியாகவும் சர்வதேசமே ஏற்றுக்கொள்ளும் இராஜதந்திரியாகவும் சாணக்கிய அரசியல்வாதியாகவும் கீர்த்தி மிகு தலைவராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இருண்ட பாதையில் பயணித்துக் கொண்டிருந்த நம் நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். இன்று அவர் மீது அரசியல் ரீதியாக சேறு பூசுகின்ற ஒவ்வொருவரும் அவராலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சொகுசுகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விட்டே புலம்புகின்றனர்.

அவரது வழிகாட்டல்கள் இராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக சிறிது சிறிதாக நம் நாட்டின் பொருளாதார நிலைமையானது எழுந்து வருகிறது. அடுத்து வரும் காலங்களிலும் அவராலேயே கை கூட இருக்கிறது. இதனை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் உணர்ந்திருக்கின்ற போதிலும் அவர்களிடத்திலே காணப்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சினது உண்மைத்தன்மையை மறைப்பதற்கு முயற்சிக்கிறது. எப்படி இருப்பினும் நாட்டு மக்கள் இன்று வரிசைகளில் நிற்கவில்லை என்பதை உணர வேண்டும். இத்தகைய பாதையில் பயணித்தால் மாத்திரமே நாம் எதிர்பார்க்கின்ற நாட்டின் பொருளாதாரம் மேன்மையடையும் நாட்டின் பொருளாதாரம் மேன்மேடைந்தால் நாட்டு மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும். அதனூடாக வடக்குக் கிழக்கு மலையகம் மற்றும் நாடு முழுவதும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடும்.

ஆகவே பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டு நம் நாடு மீட்சியடையும் ஆண்டாக மாற வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒரு மனதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிக்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT