Friday, April 26, 2024
Home » இயற்கை அனர்த்த பயிர்ச்சேதங்களை அறிக்கையிடுமாறு வடக்கு. ஆளுநர் கோரிக்கை

இயற்கை அனர்த்த பயிர்ச்சேதங்களை அறிக்கையிடுமாறு வடக்கு. ஆளுநர் கோரிக்கை

by mahesh
January 3, 2024 9:10 am 0 comment

இயற்கை அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிக்கையிடுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும். இயற்கை அனர்த்தங்களின் போது சொத்துக்கள், உயிர் சேதங்கள் தொடர்பில் மாத்திரம் அறிக்கையிடப்படுகின்ற போதிலும், பயிர்ச்செய்கைகளுக்கான சேத விபரங்கள் பட்டியலிடப்படாமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய முறையில் நஷ்டஈடு கிடைப்பதில்லை எனவும், காப்புறுதிகள் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர். சேத விபரங்கள் தொடர்பில் பட்டியலிடாமையே இதற்கு காரணமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இவ்விடயங்கள் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளத்தின் போது கள அறிக்கையிடல் முக்கியமானது எனவும், அனர்த்தங்களின் போது ஏற்படும் அழிவுகள் தொடர்பான தரவுகளை உறுதி செய்ய வேண்டியது இடர் முகாமைத்துவ நிலையத்தின் கடமை. இதன்மூலம் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தவிர்க்க முடியுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தரவுகளின் பிரதியை ஆளுநர் செயலகத்துக்கு சமர்பிக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

(பருத்திதுறை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT