களைகட்டும் சித்திரைப் பண்டிகை | தினகரன்

களைகட்டும் சித்திரைப் பண்டிகை

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு இன்னும் இரு நாட்கள்தான் உள்ளன. இன்றைய வேளையில் எமது நாட்டின் இந்து,பௌத்த மக்கள் தமிழ், சிங்களப் புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் புத்தாடை மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் பரபரப்புடன் புத்தாண்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் புத்தாண்டின் நிமித்தம் வீடுகளை அழகுபடுத்துவதிலும் புனரமைப்பதிலும் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தோடு இப்புத்தாண்டுக்காக தங்களுக்கே உரித்தான வகை வகையான உணவுப் பண்டங்களைத் தயார் செய்வதிலும் மக்கள் இந்த நாட்களில் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை தமிழ், சிங்களப் புத்தாண்டை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக வர்த்தக வாணிப அமைச்சின் கீழுள்ள லங்கா சதொச நிறுவனம் சம்பா அரிசி, சிவப்பு அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, வெள்ளைச் சீனி, நெத்தலி, டின் மீன், பெரிய வெங்காயம் ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டு நிமித்தம் முன்கூட்டியே ஏப்ரல் மாதம் 09 திகதி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இப்புத்தாண்டின் நிமித்தம் நாட்டின் பிரதான நகரங்களில் வியாபாரம் களைகட்டியுள்ளதால் 8,000 போக்குவரத்துப் பொலிஸார் மேலதிகப் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ், சிங்களப் புத்தாண்டையொட்டி விசேட பயணிகள் போக்குவரத்து சேவைக்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் விரிவான அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. நேற்று 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த விசேட போக்குவரத்துச் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர்களில் பணியாற்றும் தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தூர இடங்களுக்கும் போக்குவரத்து சேவை நடத்தப்படுகின்றன.

இப்புத்தாண்டின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயணிகள் போக்குவரத்து சேவையில் 65 மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதேநேரம் இலங்கை போக்குவரத்துச் சபை இக்காலப் பகுதியில் 1500 பஸ் வண்டிகளை பயணிகள் போக்குவரத்து சேவைக்காக மேலதிகமாக இணைத்துக் கொண்டுள்ளது. அத்தோடு 600 தனியார் பஸ் வண்டிகளும் இக்காலப் பகுதயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. என்றாலும் புத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு போக்குவரத்து சேவையிலும் விசேட கட்டணமோ வழமைக்கு மாறான கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்பட மாட்டாது. அதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை போக்குவரத்து அமைச்சு வழங்கி இருக்கின்றது.

இருந்த போதிலும், ரயில்வே சாரதிகள் உள்ளிட்ட சில ரயில் உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களும், தனியார் பஸ் உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையான வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக நேற்றுமுன்தினம் திடீரென அறிவித்தனர்.

புத்தாண்டு அண்மித்துள்ள காலப் பகுதியில் பயணிகள் போக்குவரத்துச் சேவை வழங்கும் பிரிவினர், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது பயணிகளை மிக மோசமான அசெளகரியங்களுக்கு உள்ளாக்கும். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதன் பயனாக அத்தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ரயில் மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இடம்பெற்றன.

இது இவ்வாறிருக்க, நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மின்வெட்டு இன்று முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. இதன் பயனாக புத்தாண்டு காலத்தில் மக்கள் மின்சாரமின்றி முகம் கொடுக்கவிருந்த பல்வேறு அசௌகரியங்களும் நீங்கியுள்ளன.

இவ்வாறு நாட்டு மக்கள் கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் புத்தாண்டை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

ஆகவே இப்புத்தாண்டை அமைதியாகவும் சீரும் சிறப்பாகவும் கொண்டாடுவதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருவதைக் காண முடிகின்றது. நாட்டில் அமைதி,ஐக்கியத்துக்கு வழிகோலும் இனிய புத்தாண்டாக விஹாரி வருடம் அமையட்டும்!


Add new comment

Or log in with...