சவளக்கடையில் சட்டவிரோதமாக பசுமாடுகளைக் கொண்டுவந்த இருவர் கைது | தினகரன்

சவளக்கடையில் சட்டவிரோதமாக பசுமாடுகளைக் கொண்டுவந்த இருவர் கைது

சவளக்கடை பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக பசுமாடுகளைக் கொண்டுவந்த குற்றச்சாட்டில் இருநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கால்கள் கட்டப்பட்ட நிலையில் லொறியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 14 பசுமாடுகளையும் அதனை கொண்டு வந்த லொறியையும் இன்று (10) காலை கைப்பற்றியுள்ளதுடன் லொறி சாரதி மற்றும் உதவியாளரையும் கைதுசெய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனை, நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் மாடுகளை மறைத்து கொண்டு வருவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையிலான குழுவினர் நாவிதன்வெளி வேப்பையடி பிரதேசத்தில் வைத்து 14 பசு மாடுகளையும், லொறியையும் கைப்பற்றியுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இருநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாடுகள் திருடப்பட்டு கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களையும் மாடுகளை ஏற்றிவரப்பயன்படுத்திய லொறியையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(சவளக்கடை குறூப் நிருபர் - எம்.முஹம்மட் ஜபீர்)


Add new comment

Or log in with...