மின்பாவனையில் வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்! | தினகரன்

மின்பாவனையில் வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்!

வரட்சி நீடிக்கும் இன்றைய காலத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய செய்தியை மின்சக்தி, சக்திவலு அமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்கி உள்ளார். இன்று 10ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்பதே அந்தச் செய்தியாகும். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும், செய்தி பொறுப்பாளர்களையும் நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர், இந்த விடயத்தை அறிவித்தார். இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள செய்தியாக விளங்குகிறது.

நாட்டில் கடந்த (2019)மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது பகல் வேளையில் மூன்று மணித்தியாலங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் என்றபடி தினமும் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. கடந்த 18 நாட்களாக இடம்பெறும் இந்த மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள், சிறு கைத்தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல மட்டத்தினரும் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த அசௌகரியங்கள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நீங்கி விடும் என்பதையே அமைச்சரின் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த மின்வெட்டானது, நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இம்மின்வெட்டுக்கு காரணமாக அமைந்துள்ள 500 மெகா வார்ட் மின்சாரத்தை குறைநிரப்பு அடிப்படையில் கொள்வனவு செய்து ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக இந்த மின்வெட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது. நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. இது பாராட்டத்தக்க விடயமாகும்.

மின்சாரமானது, இந்நாட்டு மக்களுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகவும், மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகவும் மாறியுள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதேநேரம் அடுத்து வரும் சில தினங்களுக்குள் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. அது இந்நாட்டு மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

இப்பண்டிகைக் காலத்துக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இவ்வாறான நிலையில் பண்டிகைக் காலத்துக்கு முன்பே இந்த மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார வாழ்வுடன் மின்சாரம் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு சிறிய கைத்தொழிலை மேற்கொள்ளவும் மக்கள் மின்சாரத்தையே பாவிக்கின்றனர். நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைக்கு மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் மின்வெட்டு என்பது எவ்விதத்திலும் ஆரோக்கியமாக அமையக் கூடியதல்ல. மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுமல்ல.

அது மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதோடு உற்பத்தி மற்றும் சேவைகள் துறையிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். அவ்வாறான ஒரு நிலைமை நாட்டுக்கு உகந்ததல்ல.

21 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் பெரும் பகுதி நீரைக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பெரிதும் குறைந்துள்ளது. இதன் விளைவாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதனால்தான் நாட்டில் மின்வெட்டை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இருந்தபோதிலும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் பயனாக மின்வெட்டு இன்று முதல் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

மின்சாரத்தின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அறியாதவர்கள் நாட்டில் எவரும் இருக்க முடியாது. எனினும் மின்சாரம் வீண் விரயம் செய்யப்படுவதை தவிர்ப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் செலுத்தப்படும் கவனம் போதியதாக இல்லை. இவ்விடயத்தில் அரசாங்கமும் பொதுமக்களும் கூட உச்ச கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் சில அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத்திரமல்லாமல் வீடுகளிலும் கூட எவரும் பயன்படுத்தாத நிலையிலும் மின்விளக்குகளும், மினவிசிறிகளும், குளிரூட்டிகளும் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. சில பிரதேசங்களில் தெருவிளக்குகள் காலையில் 7,8 மணி தாண்டிய பின்னரும் ஒளிர்வதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் மின்சாரம் வீண் விரயமாகின்றது.

இவையும் மின்வெட்டு ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றன.

ஆகவே மின்சாரத்தை சிக்கனமாகவும் வீண் விரயமற்ற முறையிலும் பாவித்து இனியொரு மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு பொதுமக்களும், அதிகாரிகளும் உச்சபட்ச பங்களிப்பை நல்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நன்மையாக அமையும்.


Add new comment

Or log in with...