Friday, April 19, 2024
Home » வெள்ளத்தில் மூழ்கியது வெருகலம்பதி ஆலயம்

வெள்ளத்தில் மூழ்கியது வெருகலம்பதி ஆலயம்

- மக்களும் இடம்பெயர்ந்து பாடசாலையில் தஞ்சம்

by Prashahini
January 2, 2024 1:35 pm 0 comment

மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு மற்றும் வெருகல் கங்கை ஆகியவற்றினூடாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை ஊடறுத்துப் பாய்வதால் அங்கு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.

இதனால் வெருகல் கங்கைக் கரையில் அமைந்துள்ள இந்துக்களின் பிரசித்த பெற்ற வெருகலம்பதி ஆலயம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கு வழிபாடுகள் இடம்பெறவில்லை.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்வதால் வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் பஸ் போக்குவரத்து இடம்பெறுகிறது.

மேலும், கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை போக்குவரத்து மகாவலி கங்கை பெருக்கெடுத்து மன்னம்பிட்டியில் வெள்ளம் பரவிச் செல்வதால் ஏற்கெனவே கடந்த வார இறுதியிலிருந்து போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவ்வீதியினூடாகப் பயணிக்கும் சகல வாகனங்களும் மட்டக்களப்பு – திருகோணமலைவ வீதியையே பயன்படுத்தி வருகின்றன.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கட்டுநாயக்கா, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவுப் போக்குவரத்துக்கள் தற்பொழுது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியூடாகவே நடைபெறுகின்றd.

வெள்ளம் ஊடறுக்கும் பிரதான வீதியின் இருமருங்கிலும் நின்று வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரும் வாகனங்களை பாதுகாப்பாகச் செல்லுமாறு வழிகாட்டி வருகின்றனர்.

இதேவேளை, வெள்ளம் பரவியுள்ளதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, வட்டவான், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 132 குடும்பங்களைச் சேர்ந்த சுமார 660 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் மற்றும் நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்குத் தயாராய் இருந்த வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT